இ.எஸ்.ஐ., திட்டங்களில் பதிவு செய்து பயன் பெறுங்கள்... சொன்னது யார் தெரியுங்களா?
ரு நிறுவனத்தில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் பட்சத்தில் நிறுவனமானது கட்டாயம் ESI-இன் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

தஞ்சாவூர்: இ.எஸ்.ஐ திட்டங்களில் பதிவு செய்து பயன் பெறுமாறு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஒரு நிறுவனத்தில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் பட்சத்தில் நிறுவனமானது கட்டாயம் ESI-இன் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இதுவரை பதிவு செய்யாத நிறுவனங்கள் SPREE 2025 திட்டத்தை பயன்படுத்தி தாமாகவே முன்வந்து ESI இன் கீழ் தங்களது நிறுவனங்களையும் தொழிலாளர்களையும் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான கால வரையறை வரும் 31.01.2026 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் நிறுவனங்களுக்கு, பதிவிற்கு முந்தைய காலத்திற்கான எந்த விதமான சந்தா தொகையும், அபராதமும், மற்றும் பதிவு செய்யாமை காண சட்ட நடவடிக்கையும் இல்லாமல் ESI சட்டத்தின் கீழ் சமூக பாதுகாப்பை விரிவுபடுத்துவதாகும். 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் உள்ள பதிவு செய்யப்படாத நிறுவனங்கள். தொழிற்சாலைகள், கடைகள் தங்கும் விடுதிகள், உணவகங்கள். திரையரங்குகள், போக்குவரத்து நிறுவனங்கள், செய்தித்தாள் நிறுவனங்கள், தனியார் மருத்துவ நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மாநகராட்சியில் பணிபுரியும் தற்காலிகம் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள், இதர நிறுவனங்கள் அடங்கும்.
நிறுவனங்களானது கீழ்காணும் இணையதளங்கள் மூலம் இ எஸ் ஐயில் பதிவு செய்து கொள்ளலாம். www.esic.gov.in, www.mca.gov.in. https//registration.shramsuvidha.gov.in/user/register. SPREE 2025 திட்டத்தில் இணைய அருகில் உள்ள இஎஸ்ஐ கிளை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். தஞ்சாவூர் பகுதிகளுக்கு உட்பட்ட நிறுவனங்கள் 04362-278523 என்ற எண்ணிற்கும் கும்பகோணம் பகுதிகளுக்கு உட்பட நிறுவனங்கள் 0435 2431467 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இ.எஸ்.ஐ திட்டத்தின் கீழ் காப்பீடு பெற்ற தொழிலாளர்கள் வேலையில் சேர்ந்த முதல் நாளில் இருந்தே தாங்களும், தங்கள் குடும்பத்தினர்களும் புற நோயாளி சிகிச்சை மற்றும் உள் நோயாளி சிகிச்சைப் பெற்றுக் கொள்ளலாம். உங்களுடைய நோய் காலங்களில் எடுக்கப்படும் சான்றளிக்கப்பட்ட விடுப்பிற்கு, நீங்கள் பெறும் சராசரி ஊதியத்தில் 70 சதவீதத்தை ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 91 நாட்களுக்கு நோய்க்கான உதவியாக பெற்றுக் கொள்ளலாம்.
காசநோய், புற்றுநோய், தொழுநோய் முதலிய வரையறுக்கப்பட்ட 34 வகையான நீண்ட கால நோய்களுக்கு நீங்கள் பெரும் சராசரி ஊதியத்தில் 80 சதவீதத்தை, அதிகபட்சமாக 730 நாட்களுக்கு பெறலாம். பெண் ஊழியர்கள் தங்களது முதல் 2 குழந்தைகளுக்காக எடுக்கும் பிரசவ கால விடுப்பின் போது, தங்களது முழு ஊதியத்தையும் 26 வாரங்களுக்குப் பெறலாம். தொழில் ரீதியாகவோ, பணி நேரத்திலோ ஏற்படும் காயங்கள் மற்றும் ஊனங்களுக்கு காயம் ஆறும்வரை நீங்கள் பெறும் சராசரி ஊதயத்தில் 90 சதவிகிதத்தை பெற்றுக் கொள்ளலாம்.
மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கும் விகிதபடி நிரந்தர ஊனத்திற்கான ஓய்வூதியம் மாதந்தோறும் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். வேலையால் அல்லது வேலை காரணமாக காப்பீடு பெற்ற ஊழியருக்கு மரணம் ஏற்படின், அவர் பெற்ற பங்களிப்பு காலத்தின் சராசரி ஊதியத்தில் 90 சதவிகிதம் வரை அவரது குடும்பத்தாரில் தகுதி வாய்ந்த சார்ந்தோருக்கு ஓய்வூதியமாக மாதந்தோறும் பகிர்ந்து வழங்கப்படும். பணியில் இருக்கும் போது, 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து சந்தா செலுத்தி காப்பீட்டாளராகவே பணி நிறைவும் அல்லது விருப்ப ஓய்வு பெற்றிருந்தால் நீங்களும் உங்கள் துணையும் வருடத்திற்கு ரூ. 120 மட்டும் செலுத்தி அடிப்படை மருத்துவபயன்கள் தொடர்ந்து பெற்றுக் கொள்ளலாம்.
நீங்கள் இ.எஸ்.ஐ-க்கு சந்தா செலுத்தும் காப்பிட்டாளராகவோ அல்லது நிரந்தர ஊன உதவி பெறுபவராகவோ அல்லது சார்ந்தோர் உதவி பெறுபவராகவோ இருந்தால், உங்கள் குழந்தைகளுக்காகவே இ. எஸ். ஐ .சி.யின் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இடங்களும் ஒதுக்கப்படுகிறது. மேற்கண்டவாறு இ.எஸ்.ஐ திட்டங்களில் பதிவு செய்து பயன் பெறுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





















