தென்னையில் சிவப்பு கூண் வண்டு தாக்குதலா... வேளாண் துறை கொடுத்த அட்வைஸ்
தென்னை மரங்கள் ஆண்டு முழுவதும் சிவப்புக்கூண்வண்டு தாக்குதலினால் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. இவ்வகையான வண்டுகளை கீழ்காணும் முறைகளில் கட்டுப்படுத்தலாம்.

தஞ்சாவூர்: தென்னையில் சிவப்பு கூண் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழி முறைகள் குறித்து தென்னை விவசாயிகளுக்கு வேளாண் துறை விளக்கம் அளித்துள்ளது. இந்த வழிமுறைகளை பின்பற்றி அதிக சாகுபடியை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனையில் கூறப்பட்டுள்ளதாவது:
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டாரங்களில், அதிகளவிலான பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த தென்னை மரங்கள் ஆண்டு முழுவதும் சிவப்புக்கூண்வண்டு தாக்குதலினால் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. இவ்வகையான வண்டுகளை கீழ்காணும் முறைகளில் கட்டுப்படுத்தலாம்.

சிகப்பு கூன்வண்டு பரவுதல் மற்றும் சேத அறிகுறிகள்
புயலினால் விழுந்த மரங்களிலிருந்து சிகப்பு கூண் வண்டுகள் மற்ற மரங்களுக்கும் பரவுவது காணப்படுகிறது. முதிர்ந்த கன்றுகளை நாற்றாங்காலில் காலம் கடந்து வைத்திருந்தால் சிகப்பு கூண் வண்டின் தாக்குதல் பரவலாக காணப்படும்.
வண்டு துளைத்த நடு தண்டின் அருகே சக்கை தள்ளியும் அதிலிருந்து பழுப்பு நிற திரவமும் செங்குத்தாக வடியும். புழுக்கள் கொண்டைப்பகுதியில் மிருதுவான திசுக்களை துளையிட்டு உள்ளே சென்று எல்லா திசுக்களையும் திண்பதால் மரங்கள் வலுவிழந்து காணப்படும். வண்டுகளின் புழுக்கள் தண்டின் நடுப்புற திசுக்களை துளையிட்டு செல்லும் சத்தம் கூர்ந்து கவனித்தால் கேட்கும். பாதிப்பு அதிகமடையும் பொழுது நடுக்குருத்து மட்டைகள் மஞ்சள் நிறமாகி பின் கீழே கொத்தாக விழுந்துவிடும்.
முதிர்ந்த வண்டுகளின் அடையாளம்
முதிர்ந்த பெண் வண்டுகள் நீள் வட்ட வடிவ வெள்ளை நிற முட்டைகளை தண்டுப்பகுதியில் உள்ள குழிகளிலும், மரத்தில் ஏற்படும் காயங்களிலும் இடும். முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் வெளிர் மஞ்சள் நிறத்தில் கால்கள் இன்றி நடுப்பகுதி தடித்தும் இருமுனைகளும் குறுகியும் காணப்படும். முதிர்ந்த புழுக்கள் தண்டின் உள்ளேயும், தென்னை நார்க்கூடுகளிலும் கூட்டுப்பழு பருவத்தை அடையும். முதிர்ந்த வண்டுகள் சிவப்பு நிறத்தில் கழுத்தின் மேற்ப்பரப்பில் 6 கரும்புள்ளிகளுடன் காணப்படும். முதிர்ந்த ஆண் வண்டுகள் நீண்ட கொம்புடன் ரோமங்களுடன் காணப்படும்.
இனக்கவர்ச்சி பொறி மேலாண்மை முறைகள்
வண்டுகள் தாக்கிய இறந்த மரங்களில் உள்ள புழுக்களை கொன்றபின் தோப்பிலிருந்து மரத்துண்டுகளை அகற்றி விட வேண்டும். தென்னை மரத்தண்டுகளின் ஏற்படும் காயங்கள் மூலம் வண்டுகள் உள்ளே செல்வதை தவிர்க்கலாம். மரங்களில் அரிவாளினால் கொத்துவதையும் மற்றும் உழவு செய்யும் போது டிராக்டரினால் மரங்களில் ஏற்படும் காயங்களை தவிர்க்க வேண்டும்.
தென்னை மர மட்டைகளை அடியுடன் வெட்டாமல் தண்டிலிருந்து 4 அடி வெட்டுவதன் மூலம் வண்டுகள் மட்டையின் அடிப்பகுதியில் முட்டையிடுவதை தவிர்க்கலாம். 45 நாட்களுக்கு ஒருமுறை மரத்தில் செவிகளை வைத்து மரத்தில் புழுக்களின் சேத சத்தத்தை கண்டறிந்த பின் குறைக்கலாம். சிகப்பு கூண் வண்டு மருந்துகளை இனக்கவர்ச்சி பொறிகளை எக்டருக்கு 2 வீதம் வேலி ஓரப்பகுதியில் வைப்பதன் மூலம் வண்டுகளை கவர்ந்தழிக்கலாம்.
காயங்கள் உள்ள மரத்தில் வண்டின் தாக்கம்
காய்ந்த அல்லது பச்சை மட்டைகளை வெட்டுவதால் மரத்தில் காயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீரோட்டம் அதிகம் உள்ள மரங்களில் இந்த வண்டின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே, மரத்தில் காயங்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவும். 10 மிலி கார்பரில் மருந்துடன் 10 மி.லி தண்ணீர் கலந்து வேர் மூலமாகவோ அல்லது 1 மி.லி இமிடாக்ளோபிரிட் மருந்துடன் 10 மி.லி தண்ணீர் கலந்து பூச்சி கடித்த இடங்களில் செலுத்துவதன் மூலம் தண்டின் நடுப்பகுதியில் உள்ள புழுக்கள் மற்றும் வண்டுகளை அழிக்கலாம். மருந்து செலுத்திய மரங்களிலிருந்து இளநீர் காய்களை 2 மாதம் வரை பறிக்கக்கூடாது.
மேற்கூறிய ஒருங்கிணைந்த முறைகளை தக்க தருணத்தில் தென்னை விவசாயிகள் கடைபிடித்து, தென்னையில் சிகப்பு கூண் வண்டு சேதத்தினை குறைத்து வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ள ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.





















