தஞ்சையில் வடிகால் பாலம் தார் சாலையின் சீர்கேடு; திரும்பும் இடத்தில் பள்ளம்... தவிக்கும் வாகன ஓட்டுனர்கள்!
தஞ்சை அருகே ராமநாதபுரம் ஊராட்சியில் வடிகால் பாலம் செல்லும் தார்சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மேலும் பழுதடைந்துள்ளது.
தஞ்சை அருகே ராமநாதபுரம் ஊராட்சியில் வடிகால் பாலம் செல்லும் தார்சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மேலும் பழுதடைந்துள்ளது. இதில் வாகனங்கள் சிக்கி விபத்து ஏற்படும் நிலையும் உள்ளது. எனவே இதை உடன் சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை அருகே ராமநாதபுரம் ஊராட்சி வழியாக வண்ணாரப்பேட்டை செல்லும் சாலையில் வடிகால் பாலம் பகுதியில் சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. கடந்த 2 வாரத்திற்கு முன்பு பெய்த கனமழையின் போது இந்த பாலம் பகுதியில் உள்ள சாலை மேலும் பழுதடைந்தது. தற்போது தஞ்சை மாவட்டத்தில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் சாலை மோசமாக மாறிவிட்டது. இதில் இரவு நேரத்தில் வாகனங்கள் சிக்கிக் கொண்டு வாகன ஓட்டுனர்கள் கீழே விழுந்து அடிபடும் நிலை உள்ளது.
இந்த சாலை வழியாக வண்ணாரப்பேட்டை, 8 கரம்பை, ஆலக்குடி, சித்திரக்குடி, பூதலூர் உட்பட பல பகுதிகளுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் ஆலக்குடி, சித்திரக்குடி, பூதலூர் பகுதியை சேர்ந்தவர்கள் பணி முடித்து இருச்சக்கர வாகனத்தில் இரவில் திரும்பும் போது இந்த சாலையில் தடுமாறி விழும் நிலை உள்ளது.
இரவு நேரத்தில் இந்த இடத்தில் எதிர் எதிரே வாகனங்கள் வரும் போது தடுமாறி விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே இந்த வடிகால் பாலம் பகுதியில் சீர்கேடான நிலையில் உள்ள சாலையை உடன் சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் சிவகாமிபுரத்தில் இருந்து ஆலக்குடிக்கு செல்லும் சாலையில் வாகனங்கள் திரும்பும் இடத்தில் சிறிய அளவில் பள்ளம் இருந்தது. தொடர்ந்து நாளுக்கு நாள் வாகனங்கள் சென்று வந்ததில் அந்த பள்ளம் பெரிய பள்ளமாக மாறிவிட்டது. இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பைக்குகள், கார், ஆட்டோ, லோடுவேன், டிராக்டர்கள் சென்று வருகின்றன.
தஞ்சை மற்றும் ஆலக்குடி, சித்திரக்குடி, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, ஆவாரம்பட்டி, புதுகல்விராயன்பேட்டை உட்பட பல பகுதிகளுக்கு செல்லும் சாலையாக இது உள்ளது. இதனால் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் விவசாய பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களும் சென்று வரும். தற்போது குறுவை அறுவடை நெருங்கி வரும் நிலையில் இன்னும் அதிகளவில் வாகனப்போக்குவரத்து இருக்கும்.
மேலும் கரம்பை வழியாக வண்ணாரப்பேட்டைக்கு ரயில்வே கீழ்பாலம் வழியாக கார் மற்றும் பைக்குகள் தினமும் சென்று வருகின்றன. சாலை திரும்பும் இடத்தில் இந்த பள்ளம் உள்ளதால் எதிர் எதிர் திசைகளில் வரும் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகின்றன.
இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக வேலை முடிந்து பைக்குகளில் வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். தற்போது பெய்த கனமழையாலும் இந்த பள்ளம் பெரியதாக மாறிவிட்டது. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பள்ளத்தை சீர் செய்ய உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், சின்னதாக இருக்கும் போதே இந்த பள்ளத்தை மூடி தார் போட்டு சாலையை சீரமைத்து இருந்தால் பள்ளம் இந்தளவிற்கு பெரியதாகி பிரச்னைகளை ஏற்படுத்தாது. இரவு நேரத்தில் வாகனங்கள் வருபவர்கள் எதிரில் மற்றொரு வாகனம் வந்தால் தடுமாறி விழுந்து அடிபட்டு கொள்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.