கும்பகோணத்தில் புதிய தண்டவாளங்கள் மாற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் வெகு மும்முரம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை இடையே புதிய தண்டவாளங்கள் மாற்றும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை இடையே புதிய தண்டவாளங்கள் மாற்றும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்
ரயில் பயணம் ஒரு வரப்பிரசாதம்
ரயில் பயணம் என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் நடுத்தர மக்களுக்கு ரயில் பயணம் ஒரு வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும். தொலைதூர பயணத்தை குறைந்த செலவில் முடித்து விடலாம் என்பதால் பொதுமக்களின் முதல் தேர்வாக ரயில் பயணம் உள்ளது. முக்கியமாக வேலைக்கு செல்பவர்களுக்கு ரயில்கள் உற்றத் தோழனாக உள்ளது.
2 முக்கிய வழித்தடங்கள்
இந்திய ரெயில்வே துறையில் பல்வேறு வகையில், மொத்தம் 1 லட்சத்து 9 ஆயிரத்து 996 கி.மீ. நீளத்திற்கு ரெயில் பாதைகள் உள்ளன. தொடக்க காலத்தில் மீட்டர் கேஜ் வகையிலான பாதைகள் அதிகம் இருந்தது. அதன்பின்னர் ரெயில்வே துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக நாடு முழுவதும் உள்ள ரெயில் பாதைகள் அகலபாதைகளாக அமைக்கப்பட்டன.
திருச்சி ரெயில்வே கோட்டத்தில் 2 முக்கிய வழித்தடங்கள் உள்ளன. ஒன்று திருச்சி-விழுப்புரம் இடையேயான விருத்தாசலம், அரியலூரை உள்ளடக்கிய ரெயில் பாதை. இது கார்டு லைன் என்று அழைக்கப்படுகிறது. மற்றொன்று தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர் வழியான ரெயில் பாதை. இது மெயின் லைன் என்று அழைக்கப்படுகிறது.
ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட ரயில் பாதை
தஞ்சை வழியான ரெயில் பாதையே மிகவும் பழமையான ரெயில் பாதை ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது ஆங்கிலேயேர் காலத்திலேயே அமைக்கப்பட்டது. கும்பகோணம் வழியாக 29-க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயிலும், 15-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மத்திய அரசு தஞ்சை-திருச்சி இடையே இருவழிப்பாதை திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
தஞ்சையில் இருந்து மயிலாடுதுறை வரை மொத்தம் 70 கிலோமீட்டர் தூரம் உள்ளது. இந்த ரெயில் பாதையில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் அதனை அகற்றிவிட்டு அதனை விட கூடுதல் தரம் வாய்ந்த தண்டவாளங்கள் அமைப்பதற்காக ரெயில்வேதுறை நடவடிக்கை எடுத்தது. அதன்படி கடந்த 3 மாதங்களாக கும்பகோணம் அருகே சுந்தர பெருமாள் கோவில் ரெயில் நிலையத்தில ஆரம்பித்து மயிலாடுதுறை வரை உள்ள தண்டவாளங்கள் மாற்றும் பணிகள் நடந்து வருகிறது.
ரயில் தண்டவாளங்கள் மாற்றும் பணிகள் மும்முரம்
இந்த பணிகளை ரெயில்வே அலுவலர்கள் மேற்பார்வையில் 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதில் முதற்கட்டமாக பழைய தண்டவாளத்தை அப்புறப்படுத்தினார்கள். பின்னர் புதிய தண்டவாளத்தை பொருத்தினார்கள். தண்டவாளத்தை இணைக்கும் இடத்தில் வெல்டிங் மூலம் சரிசெய்தனர்
இதுகுறித்து ரெயில்வே அலுவலர்கள் தரப்பில் கூறுகையில், தஞ்சை-மயிலாடுதுறை இடையே தண்டவாளம் அமைக்கப்பட்டு பலஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் தொடா்ந்து ரெயில் சென்று வரும் போது அதன் தன்மை குறைந்துள்ளது. இதனால் ரெயில்கள் செல்லும் போது விரிசல் மற்றும் பழுதுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் பழைய தண்டவாளத்தை நீக்கிவிட்டு புதிய தண்டவாளம் மாற்றப்படுகிறது.
அதிக திறன் கொண்ட தண்டவாளங்கள்
இந்த தண்டவாளங்கள் பழைய தண்டவாளத்தை விட அதிக திறன் கொண்டது. இதனால் அதிக வலுவுள்ள ரெயில்கள் மற்றும் கூடுதல் ரெயில்கள் இயக்கலாம். ஏற்கனவே தஞ்சை-சுந்தரபெருமாள் கோவில் வரை பணிகள் முடிக்கப்பட்டு ஓராண்டு ஆகிவிட்டது. தற்போது சுந்தரபெருமாள் கோவில் முதல் மயிலாடுதுறை வரை பணிகள் நடந்து வருகிறது. நாளுக்கு நாள் ரெயில் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது என்றார்.