டாஸ்மாக் ஊழியர் கொலையை கண்டித்து தஞ்சாவூரில் போராட்டம் - குமுறும் டாஸ்மாக் ஊழியர்கள்...!
’’மதுக்கடை சார்ந்த சரகத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு பாதுகாப்பிற்காக மாமூல் வழங்க கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு’’
காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடத்தை அடுத்த வரணவாசி பெருமாள்கோயில் தெருவை சேர்ந்தவர் துளசிதாஸ் (40). மாற்றுத்திறனாளியான இவர், ஒரகடத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இதே கடையில் காஞ்சிபுரத்தை அடுத்த நத்தாநல்லுாரை சேர்ந்த ராமு (42) என்பவரும் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இருவரும், இரவு பணி முடிந்து கடையை மூடி விட்டு வீட்டிற்கு செல்ல தயாரானார்கள். அப்போது அங்கு வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள், துளசிதாஸை கத்தியால் குத்தினர். அப்போது, துளசிதாஸ் கூச்சலிட்ட சத்தம் கேட்டு ஒடி வந்த போது, ராமுவை சரமாரியாக தாக்கி விட்டு, கொலையாளிகள் தப்பியோடி விட்டனர். ஆனால் துளசிதாஸ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இது குறித்து ராமு, டாஸ்மாக் மேற்பார்வையாளர் முத்துகுமாருக்கு கொடுத்த தகவலின் பேரில், ஒரகடம் போலீசார் வழக்கு பதிந்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர். போலீசார் விசாரணையில், ரவுடிகளுக்கு மாமூல் வழங்குவது காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
துளசிதாஸ் கொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கடையடைப்பும், ஒரு மணி நேரம் மட்டும் அடைத்து போராட்டம் செய்தனர். டாஸ்மாக் விற்பனையாளர் துளசிதாசின் படுகொலை செய்ததை கண்டித்தும், விற்பனையாளர் ராமு மீது கொலைவெறி தாக்குதலை கண்டித்தும் கொலை செய்த ரவுடிகளை கைது செய்ய கோரியும், துளசிதாஸ் குடும்பத்திற்கு 25 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கிடவும், படுகாயம் அடைந்த ராமுவின் மருத்துவ செலவை முழுமையாக நிர்வாகம் ஏற்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் டாஸ்மாக் ஏஐடியூசி சங்கம் தஞ்சாவூர் ரயிலடி முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கோடீஸ்வரன் தலைமை வகித்தார்.
தொமுச மாவட்ட செயலாளர் சேவியர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஏஐடியூசி மாநில செயலாளர் சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் ஜெயபால் ஏஐடியூசி மாவட்ட செயலாளர் தில்லைவனம், மாவட்ட தலைவர் வே.சேவையா, அரசு போக்குவரத்து ஏஐடியுசி சம்மேளன துணைத் தலைவர் துரை. மதிவாணன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளின் உண்மை நிலவரம் குறித்து டாஸ்மாக் ஊழியர் ஒருவர் கூறுகையில்,
டாஸ்மாக் கடை பணியில் சேர்ந்து 18 ஆண்டுகள் முடிந்தும் பொதுமக்களிடம் பிச்சை எடுத்து பிழைக்கும் நிலை உள்ளது. பட்டதாரி ஊழியர்களை மீண்டும் மீண்டும் பிச்சை எடுக்க வைப்பதுதான் நமது அரசின் அவலநிலையாக உள்ளது. பாட்டிலுக்கு 5 மற்றும் 10 கூடுதலாக விற்றே ஆக வேண்டும். ஒரு மதுபான பெட்டிக்கு குறைந்த பட்ச இறக்கு கூலியாக 5 கொடுக்க வேண்டும். சுமார் 200 பெட்டி இறக்கினால் 1000 கொடுத்தே ஆகவேண்டும். ஒவ்வொரு கடையிலிருந்தும் மாத ஆடிட்டிங் என்ற முறையில் 1000 லிருந்து 3000 வரை கட்டாய வசூல் செய்யப்படுகிறது. மதுக்கடை சார்ந்த சரகத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு பாதுகாப்பிற்காக மாமூல் கட்டாயம் வேண்டும். கடை அமைந்திருக்கும் தனியார் இட உரிமையாளருக்கு அரசு தரும் குறைந்த வாடகை எவரும் பெருவதில்லை. ஆகையால் அவர்கள் 500 முதல் 1000 த்திற்கும் மேலாக தினசரி பெற்று வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடையிலிருந்தும் அந்தந்த மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு ஒவ்வொரு கடையிலிருந்தும் குறைந்தது 5000 முதல் 20,000 வரை வசூல் செய்யப்படுகிறது. மதுபானம் கொண்டு வரும் பெட்டிகளை உள்ளூர் வியாபாரிகளிடம் பாதி விலைக்கு விற்று அரசு கேட்கும் முழுத்தொகையும் கட்டியாகவேண்டும். டாஸ்மாக் கடைகளின் வழியாக பிரவேசிக்கும் ஒருசில அலுவலர்கள் நானும் அதிகாரிதான் நானும் ஆய்வு செய்வேன் என மிரட்டி 500 முதல் 1000 வரை பணம் பறித்து செல்வது வழக்கமாகிவிட்டது. உள்ளூர் அரசியல்வாதிகள் சமூக விரோதிகள் என அவர்கள் சார்ந்த கட்சி கூட்டம், மற்றும் மாநாடு, பலவகையான செலவுகளுக்காக மிரட்டி நன்கொடை கொடுத்தே ஆகவேண்டும்.
ஒவ்வொரு மாதச்சம்பளத்தின் போதும் வருகை பதிவேடு கொடுக்கும்போதும் கடைக்கேற்றது போல் கொடுக்கவேண்டும். ஒவ்வொரு கடைகளுக்கும் மதுபான தேவை பட்டியல் அலுவலகத்திற்கு கொடுக்கும் போது சரக்கின் தேவைகளுக்கேற்றாற்போல தொகை கொடுத்தே ஆக வேண்டும். நமது சூழ்நிலையின் காரணமாக ஒரு கடையிலிருந்து மற்றொரு கடைக்கு பணியிட மாறுதல் கோரும்போது. துணை மேலாளர் மற்றும் முது நிலை மண்டல மேலாளர் அலுவலகத்திற்கு செலவு செய்தால் மட்டுமே பணியிட மாறுதல் பெறமுடியும்.
கடந்த 18 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மதுபானக்கடையில் பணிசெய்து வரும் பார் உதவியாளர். 8500, கடை விற்பனையாளர் 9500, கடை மேற்பார்வையாளர் 11500, வழங்கப்படுகிறது. 18 ஆண்டுகாலமாக பணிசெய்யும் ஊழியர்களின் சம்பளத்தொகை வைத்துக்கொண்டு, அவர் கூடுதலாக விற்று மேலே குறிப்பிட்ட அனைவருக்கும் அனைத்தையும், பிரித்து கொடுத்து சமாளித்து விட்டு கடைபணியை முடித்து வீடுவந்து சேர்வதற்க்கு உத்திரவாதம் கிடையாது. ஒரு வாடிக்கையாளரிடம் 5 மற்றும் 10 கூடுதலாக பெறுவது சட்டபடியும், மனிதாபிமான அடிப்படையிலும், தவறுதான். வாடிக்கையாளரின் பணத்தை திருடுவதற்கு சமமான வேலை தொடர விடுவது நம்மை ஆளும் அரசின் கவனக்குறைவே தவிர, எங்களது படித்த பட்டதாரி இளைஞர்களின் தவறல்ல. எங்களது டாஸ்மாக் ஊழியர்களில் 90 சதவீதம் பேர் அதிகமாக படித்த பட்டதாரிகள் தான் பணியாற்றி வருகிறார்கள். ஆனால் கடந்த 18 ஆண்டுகளாக அரசு ஒரு சராசரி ஊழியருக்கு வழங்கப்படவேண்டிய அனைத்து உரிமைகளையும் வழங்க மறுத்ததின் காரணமே இன்றைய மதுபான கூடுதல்"விற்பனைக்கு முக்கிய காரணம் என்பதை மாறி! மாறி!! நம்மை ஆளும் அரசுகளின் செவிகள் ஏற்க மறுக்கின்றன.
ஒரு சராசரி ஊழியருக்கு கிடைக்கவேண்டிய அடிப்படை உரிமைகள் அனைத்தும் வழங்கி விட்டு. முறைகேடுகளில் ஈடுபடும் டாஸ்மாக் ஊழியர்களை பணிநீக்கம் செய்து உத்தரவிட வேண்டிய பொருப்பு அரசிடம் உள்ளது. அதனை விடுத்து கண்டும் காணாமல் கூடுதலாக விற்பனை செய்ய சொல்வது, பின்பு பேரம் பேசி பணம் பறிப்பது. இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் டாஸ்மாக் கடை ஊழியர்களான நாங்கள் எப்போதுதான் தலை நிமிர்ந்து கண்ணியத்தோடும்! தலைநிமிர்வோடும் வாழ்வது என்றார்.