தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்காக வீடுகளை இடிக்க எதிர்ப்பு - பொதுமக்கள் சாலை மறியல்
’’தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு கட்டி ஒதுக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை பொதுமக்கள் ஏற்க மறுத்து விட்டனர். இதற்காக 145 கோடியில் 969 வீடுகள் கட்டப்பட உள்ளன’’
தஞ்சாவூர் மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தஞ்சை அகழி, பூங்காக்கள் போன்றவை சீரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த அகழி மற்றும் கோட்டைமேடு பகுதியான வடக்கு அலங்கம், மேல அலங்கம், சீனிவாசபுரம், செக்கடி உள்ளிட்ட இடங்களில் 3,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக இந்த பகுதியில் உள்ள வீடுகளை இடித்து விட்டு பணிகள் மேற்கொள்ளப்போவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு அங்கு வசித்து வரும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு மாற்று இடமாக பிள்ளையார்பட்டி பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு கட்டி ஒதுக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை பொதுமக்கள் ஏற்க மறுத்து விட்டனர். இதற்காக 145 கோடியில் 969 வீடுகள் கட்டப்பட உள்ளன.
இந்நிலையில் இது தொடர்பாக அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுடன் ஆலோசனை கூட்டம் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நடத்துவதாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அறிவித்து அந்த பகுதி பொதுமக்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட பொது மக்கள் காலை 9 மணிக்கே கூட்டம் நடைபெறும் அரங்கத்திற்கு வந்தனர். மேலும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் தனசேகரன், உதவி நிர்வாக பொறியாளர் யோகேஸ்வரன் மற்றும் அதிகாரிகளும் அங்கு வந்தனர். ஆனால் கூட்டம் நடத்தப்படவில்லை.
இதையடுத்து மதியம் 1 மணி ஆகியும் கூட்டம் நடத்தப்படாதால், காத்திருந்த பொது மக்கள் ஆத்திரம் அடைந்த அரங்கை விட்டுவெளியேறி அண்ணா சிலை அருகே அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் தலைமையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் 3 தலைமுறையாக கோட்டை மேடு பகுதியில் வசித்து வருகிறோம். நாங்கள் இருக்கும் இடத்தை காலி செய்ய மாட்டோம். இங்கேயே எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். இந்த இடத்தை விட்டு தொலைவில் வேறு இடத்திற்கு செல்ல மாட்டோம். எங்கள் குழந்தைகள் இந்த பகுதியில் தான் படித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த பகுதியில் வசிக்கும் மக்களுடன் ஆலோசனை நடத்தும் நடத்துவதாக அழைப்பு விடுத்து இருந்தனர். அதன்படி நாங்கள் காலையில் இருந்தே வந்து கலந்து கொண்டுள்ளோம். தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் கூட்டத்திற்கு வந்தார். ஆனால் அப்போது மக்கள் கூட்டம் குறைவாக இருந்தால் அவர் சென்று வி்ட்டார். ஆனால் தஞ்சாவூர் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் வராததால் கூட்டம் நடத்தப்படவில்லை. எனவே நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கபிலன், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து விட்டனர். இதையடுத்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் தனசேகரன், உதவி நிர்வாகப்பொறியாளர் யோகஸ்வரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் இது தொடர்பாக எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தேதி முடிவு செய்து மீண்டும் கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர். அதன் பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்,. இந்த மறியில் போராட்டாதால் பழைய பஸ் நிலையம் அருகே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வடக்கு அலங்கம் பகுதியில் உள்ள அகழி அருகில் குடியிருப்பவர்களை காலி செய்ய மாநகராட்சி உத்தரவிட்டதது. அப்போது எம்எல்ஏ நீலமேகம், அங்குள்ள வீடுகளை இடிக்க கூடாது என பொது மக்களுடன், போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.