(Source: ECI/ABP News/ABP Majha)
கும்பகோணத்தில் வயலுக்குள் பாய்ந்த தனியார் பேருந்து - அதிர்ஷ்ட வசமாக உயிர்த்தப்பிய 50 பயணிகள்
’’அப்போது அச்சாலையில் காரில் சென்று கொண்டிருந்த அரசு தலைமை கொறாடா கோவி.செழியன், வயலில் பாய்ந்த பேருந்தை பார்வையிட்டு, உடனடியாக, போலீசாருக்கு தகவல் கொடுத்தார்’’
வட கிழக்கு பருவ மழை தொடங்கியதைடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகின்றது. தஞ்சாவூரில் 26 மிமீ, திருவையாற்றில் 6 மிமீ, பூதலுாரில் 45.80 மிமீ, ஒரத்தநாட்டில் 19.40 மிமீ, கும்பகோணத்தில் 13 மிமீ, பாபநாசத்தில் 26.60 மிமீ, திருவிடைமருதுாரில் 51.40 மிமீ, பட்டுக்கோட்டையில் 13.60 மிமீ மழை பெய்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 201.80 மிமீ அளவில் மழை பெய்துள்ளது. இதே நாளில் கடந்த 2019 ஆம் ஆண்டு 677.46 மிமீ, 2020 ஆம் ஆண்டு 501.53 மிமீ, 2021 ஆம் ஆண்டு இன்று வரை 1146.15 மிமீ அளவு பெய்துள்ளது. கடந்தாண்டை விட இரண்டு மடங்கு அதிகமாக மழை பெய்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் தாலுக்காவில் அதிகஅளவில் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு அரியலுாருக்கு சென்றது. அப்போது திருப்பனந்தாளை அடுத்த திருவாய்ப்பாடி திருப்பத்தில் தனியார் பேருந்து வேகமாக வந்தது. அப்போது பேருந்து நிறுத்ததில் பயணிகள் நிற்பதை பார்த்து, பிரேக் போடுவதற்கு, டிரைவர் முயன்ற போது, பிரேக் பிடிக்காமல், சாலையின் ஒரத்தில் இருந்த வயலுக்குள் பாய்ந்தது.
இதில் பேருந்தின் உள்ளே இருந்து 5 க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து திருப்பனந்தாள் போலீசார் விசாரித்து வருகின்றனர். அப்போது அச்சாலையில் காரில் சென்று கொண்டிருந்த அரசு தலைமை கொறாடா கோவி.செழியன், வயலில் பாய்ந்த பேருந்தை பார்வையிட்டு, உடனடியாக, போலீசாருக்கு தகவல் கொடுத்து, பயணிகள் யாராவது காயம் அடைந்திருந்தால், உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.
இது குறித்து பேருந்தில் வந்தவர் கூறுகையில், கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து புறப்பட்டதிலிருந்கு வேகமாக வந்து கொண்டிருந்தது. திருப்பனந்தாளை அடுத்த திருவாய்ப்பாடி திருப்பத்தில் வரும் போது, பயணிகள் நிற்பதை அறிந்து டிரைவர் பிரேக் போடுவதற்கு முயன்றார். ஆனால் தொடர் மழையால் பைபாஸ் சாலையில் பிரேக் பிடிக்க முடியவில்லை. இதனை அறிந்த பயணிகள் கூச்சலிட்டனர்.
பேருந்து பிரேக் பிடிக்காமல் சென்று சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவற்றில் மோதினாலோ அல்லது அதையும் தாண்டி, எதிர்புறம் வரும் சாலையில் வேகமாக வரும் வாகனத்தில் மீது மோதினாலோ, பேருந்தில் உள்ளவர்களின் நிலை கேள்வி குறியாகும் என்று சாமர்த்தியமாக, தனியார் பேருந்து டிரைவர், வயலுக்குள் இறக்கினார். இதில் அதிஷ்டவசமாக ஐந்துக்கும் மேற்பட்டோர் லேசான காயத்துடன் 50 பேரும் உயிர் தப்பினர். கும்பகோணத்திலிருந்து அணைக்கரை வரை உள்ள பைபாஸ் சாலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், வேகமாக செல்லும் வாகனங்களில் பிரேக் பிடிப்பது கிடையாது. சாலையின் நிலை தெரியாமல், வரும் வாகனங்கள், திடீரென பிரேக் பிடிக்காததால், விபத்தில் சிக்கி கொள்கிறார்கள் என்றார்.