தஞ்சை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்
தஞ்சை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உற்றார் உறவினர்களுடன் மக்கள் பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர்.
தமிழர்களின் திருநாள் பொங்கல் பண்டிகை தஞ்சை மாவட்டம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் புது அரிசியை புது பானையில் இட்டு பொங்கல் வைத்து சூரிய பகவானை வணங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
பொங்கல் பண்டிகை தை மாதம் 1-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் பயிரிடப்பட்ட நெல் தை மாதத்தில் அறுவடை செய்யப்பட்டு நல்ல விளைச்சலை தரும் மாதமே இந்த பொங்கல். இந்த விளைச்சலை கொடுத்த இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் விதமாக சர்க்கரை பொங்கல் சமைத்து சூரியனுக்கும், மாட்டுக்கும் படைத்து வணங்கி நன்றி சொல்லும் தமிழர் திருநாள்தான் பொங்கல் பண்டிகை.
பொங்கல் விழா வருவதற்கு முன்னரே பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்க ஆரம்பித்துவிடுவார்கள். வீட்டை சுத்தப்படுத்துவது, வீட்டிற்கு புதிய சுண்ணாம்பு அடிப்பது போன்று ஊரே திருவிழா கோலத்தில் காணப்படும். பொங்கல் விழா நான்கு நாள் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று, பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் இந்த போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலுமே போகி பண்டிகையாகும்.
பழைய பொருட்களையும், உபயோகமற்ற பொருட்களையும் தூக்கி எறியும் வழக்கம் உள்ளது. வீட்டில் உள்ள பொருட்களை மட்டுமல்ல நம் மனதில் இருக்கும் தேவையற்ற எண்ணங்களையும், தீய எண்ணங்களையும் விட்டொழிப்பதற்காக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு முதல் நாள் புது பானை, புது ஆடை வாங்குவார்கள். வீட்டின் வாசலில் பொங்கல் கோலம் போடுவார்கள். வீட்டின் முன் புது அடுப்பு வைத்து, புது பானையில் புது அரிசி இட்டு முற்றத்தில் பொங்கல் வைப்பார்கள். அதன்படி இன்று புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவித்து பொங்கலுக்கு புதிய கரும்பு, புதிய காய்கறிகள் என அனைத்தையும் புதியவைகளையே பயன்படுத்தி பானையில் மஞ்சள், குங்குமம் வைத்து பொங்கலிட்டு கொண்டாடினர். பொங்கல் பொங்கி வந்தபோது குடும்பத்தில் உள்ள அனைவரும் பொங்கலோ! பொங்கல் என்று உற்சாக குரல் எழுப்பினர்.
தஞ்சை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உற்றார் உறவினர்களுடன் மக்கள் பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர். புதுபானையில் பொங்கலிட்டு நண்பர்கள், உறவினர்களுக்கு கொடுத்து தங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
முன்னதாக பொங்கல் திருநாளையொட்டி, தஞ்சாவூரில் உள்ள சந்தைகளில் நேற்று சனிக்கிழமை முழுவீச்சில் விற்பனை நடைபெற்றது. தஞ்சாவூா் காமராஜா் சந்தை, கீழவாசல், திலகா் திடல் சந்தையில் வழக்கத்தை விட சனிக்கிழமை கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. பொங்கல் பண்டிக்கைக்கு தேவையான கரும்பு, மஞ்சள் கொத்து, வாழைத்தாா்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. இதேபோல, வியாபாரிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.
கரந்தை, சிவகங்கை பூங்கா, மருத்துவக் கல்லூரி சாலை, நாஞ்சிக்கோட்டை சாலை, விளாா் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் கரும்பு, மஞ்சள் கொத்துகள் குவிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டது. பத்து கரும்புகள் கொண்ட கட்டு ரூ. 200 முதல் ரூ. 300 வரையிலும், சில்லறையாக ஒரு கரும்பு ரூ. 15 - ரூ. 20 வீதமும், ஒரு ஜோடி மஞ்சள் கொத்து ரூ. 20 - ரூ. 40 வரையிலும், வாழைப்பழம் கிலோ ரூ. 50 முதல் ரூ. 60 வரையிலும் விற்பனையானது. இதேபோல, மண் பானை ரூ. 80 முதல் ரூ. 400 வரையிலும், மண் அடுப்பு ஏறத்தாழ ரூ. 200-க்கும் விற்கப்பட்டது. பொங்கல் திருநாளையொட்டி பூக்கள் விலையும் அதிகமாக இருந்தது. தஞ்சாவூா் பூச்சந்தையில் செவ்வந்திப் பூ கிலோ ரூ. 200 முதல் ரூ. 250 வரையிலும், அரளி அரை கிலோ ரூ. 400-க்கும் விற்பனையானது.