உருட்டிய சத்தம் கேட்டுடுச்சு... சிக்கிக்கிட்டார் பாத்திர திருடன்...தஞ்சையில் நடந்த சம்பவம்
பாத்திரகள் உருளும் சத்தம் கேட்டதும், வீட்டில் இருந்தவர்கள் திருடன், திருடன் என்று சத்தம் போட்டனர்.
என்ன கொடுமைடா சாமி... பித்தளைப் பாத்திரங்களை கூட விட மாட்டேன்கிறாங்க என்று தஞ்சை மக்கள் தலையில் அடித்துக் கொள்ளும் நிலை உள்ளது. காரணம் பைக், நகை என்று திருடியவர்கள் இப்போது பித்தளைப்பாத்திரங்களையும் களவாட ஆரம்பித்து விட்டனர்.
தஞ்சை கீழவாசல் வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மனைவி முத்துமாலை (50). இவா்கள் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகின்றனர். வீட்டின் பின்புறம் பழைய பித்தளை பாத்திரங்களை போட்டு வைத்திருந்தனர். சம்பவத்தன்று முத்துமாலை வீட்டிற்கு பின்னால் இருந்த பித்தளை பாத்திரங்களை மர்மநபர் ஒருவர் திருடி கொண்டிருந்தார். பாத்திரகள் உருளும் சத்தம் கேட்டதும், வீட்டில் இருந்தவர்கள் திருடன், திருடன் என்று சத்தம் போட்டனர்.
உடனே அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தார். முத்துமாலை பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். தொடர்ந்து போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் தஞ்சை வடக்கு வாசலை சேர்ந்த மணிகண்டன்(25) என்பதும், பாத்திரங்கள் திருடியதும் தெரியவந்தது. இதுகுறித்து முத்துமாலை செய்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யா வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தார்.
வீட்டு பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருட்டு
தஞ்சையை அடுத்த மாரியம்மன் கோவில் ரமணா நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிகுமார் மனைவி மோனிகாஸ்ரீ (30). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு பெங்களூருவுக்கு சென்றார். இந்த நிலையில் இவருடைய வீடு திறந்து இருப்பதாக வீட்டின் அருகில் உள்ளவர்கள் மோனிகாஸ்ரீக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு, பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு, அதில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த 5 பவுன் நகைகளை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் பூட்டை உடைத்து பவுன் நகையை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து, தாலுகா போலீஸ் நிலையத்தில் மோனிகாஸ்ரீ புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்கள், வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தச்சு தொழிலாளி தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மணிகண்டன்(23). தச்சு தொழிலாளி. இவர் தனது மனைவி மெர்சி செல்சியாவுடன் தஞ்சை ராஜப்பாநகர் பகுதியில் வசித்து வந்தார். சம்பவத்தன்று மணிகண்டன் வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் மனைவி மெர்சி செல்சியா புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.