மயிலாடுதுறை: ’நடந்தாய் வாழி...காவிரியை வரவேற்ற பொதுமக்கள்!’
மயிலாடுதுறையில் புகழ்வாய்ந்த காவிரி துலாகட்டத்திற்கு வந்து காவிரி நீரை வரவேற்று மக்கள் பூஜைசெய்து வழிபாடு செய்தனர்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்கியதையடுத்து கடந்த 12ம் தேதி டெல்டா மாவட்ட குறுவை சாகுபடி பாசனத்துக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணையின் தண்ணீரைத் திறந்துவிட்டார். முன்னதாக மேட்டூரில் திறக்கப்படும் காவேரி தண்ணீர் தங்குதடையின்றி காவிரி கடைமடை பகுதிவரை சென்று அடைவதற்காக தமிழ்நாடு அரசு டெல்டா மாவட்டங்களில் ஆறு மற்றும் வாய்க்கால்களில் 65 கோடி ரூபாய் செலவில் தூர்வாரும் பணிகளைத் தொடங்கியது. இதில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கவும், இப்பணிகள் முழுமையாகவும் வேகமாகவும் நடைபெறுவதற்காகவும், 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைச் சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆறுகள், வாய்கால்கள் மற்றும் வடிகால்கள் ஆகியவற்றில் சுமார் 431 கிலோ மீட்டர் தூரத்துக்கு தூர்வாரும் பணிகளுக்காக முதலமைச்சரின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் 5 கோடியே 45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைப்பெற்றன. இதனையடுத்து கடந்த மே மாதம் 28ம் தேதி கனரக வாகனங்களைக் கொண்டு தூர்வாரும் பணிகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடங்கப்பட்டதை அடுத்து தற்போது தூர்வாரும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இந்தச் சூழலில் மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் நேற்றிரவு கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்ட எல்லை திருவாலங்காடு காவிரி, விக்ரமன் ஆற்றின் தொடக்கப் பகுதியில் உள்ள நீர் தேக்கிக்கு வந்தடைந்தது. காவிரியில் முதற்கட்டமாக 682 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்ட பாசனத்திற்காக விக்ரமன் ஆற்றின் நீர் தேக்கியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதில் விவசாயிகள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, இந்த நீரானது இன்று மதியம் மயிலாடுதுறை மாவட்ட காவிரி துலாக் கட்டத்தை வந்தடைந்தது. காவிரி துலாக்கட்டத்தில் கங்கை ஐப்பசி மாதம் முழுவதும் புனித நீராடி தனது பாவங்களைப் போக்கிக் கொண்டதாக உள்ள ஐதீகத்தால் மயிலாடுதுறை சிவாலயங்களில் இருந்து சுவாமி அம்பாள் எழுந்தருளி ஐப்பசி மாதம் முழுவதும் தீர்த்தவாரி இந்த துலாக்கட்டத்தில் நடைபெறும். இத்தகைய சிறப்பு வாய்ந்த காவிரி துலா கட்டத்திற்கு வந்த காவிரி தண்ணீரை துலாக்கட்ட பாதுகாப்பு கமிட்டியினர் சார்பில் மலர்தூவி வரவேற்றனர்.
துலாக்கட்டத்திற்கு பொங்கி வந்த காவிரி நீரை அன்னையாக பாவித்து மலர்தூவி வரவேற்று, சிறப்பு பூஜைகள் செய்தனர். இதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், கிராமிய நாடக கலைஞர்கள் விநாயகர், சிவன், அகத்தியர், உள்ளிட்ட கடவுள் வேடங்கள் அணிந்து மலர்தூவி வரவேற்றனர். தொடர்ந்து காவிரி தண்ணீருக்கு பஞ்சமுக தீபாரதனை காண்பிக்கப்பட்டு வணங்கி வழிபாடு நடத்தப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக குறைவான பக்தர்களே இதில் பங்கேற்றனர்.
Also Read: தமிழ்நாட்டில் 7424 பேருக்கு கொரோனா பாதிப்பு; சென்னையில் அதிகரிப்பு!