நடப்பாண்டு குறுவை பருவத்தில் 5 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறுதி
நடப்பாண்டு குறுவை பருவத்தில் 5 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்தார்.
![நடப்பாண்டு குறுவை பருவத்தில் 5 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறுதி Paddy will be cultivated in 5 lakh acres during the current year's Kurvai season: Minister MRK Panneerselvam confirmed TNN நடப்பாண்டு குறுவை பருவத்தில் 5 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறுதி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/08/89301fc611dc44ec24504f0da20f7c0d1686225499540733_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தஞ்சாவூர்: நடப்பாண்டு குறுவை பருவத்தில் 5 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்தார்.
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முன்னேற்பாடு நடவடிக்கை தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் 7 மாவட்ட அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:
குறுவைப் பருவத்தில் 2018ம் ஆண்டு 3.26 லட்சம் ஏக்கரிலும், 2019 ஆம் ஆண்டில் 2.91 லட்சம் ஏக்கரிலும், 2020 ஆம் ஆண்டில் 4.70 லட்சம் ஏக்கரிலும், 2021 ஆம் ஆண்டில் 4.91 லட்சம் ஏக்கரிலும், 2022 ஆம் ஆண்டில் 5.36 லட்சம் ஏக்கரிலும் நெல் சாகுபடி செய்யப்பட்டது. தமிழக முதல்வர் அறிவித்த குறுவை தொகுப்பு திட்டம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் சாகுபடி பரப்பு அதிகரித்தது. நிகழாண்டு 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படும்.
இதற்காக 4 ஆயிரத்து 45 டன்கள் விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் 4 ஆயிரத்து 46 டன்கள் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதேபோல யூரியா, டிஏபி போன்ற உரங்கள் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 289 டன்கள் கையிருப்பில் உள்ளன.
அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்கு அரசு தயார் நிலையில் உள்ளது. தேவையான இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்.
மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு முன்பாக தூர் வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மூத்த ஐஏஎஸ் அலுவலர்களைக் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளார். இந்தப் பணிகளைத் தமிழக முதல்வர் நாளை(இன்று) ஆய்வு செய்ய உள்ளார்.
மேட்டூர் அணையில் தற்போது போதுமான அளவுக்கு நீர் இருப்பு உள்ளது. நமக்குரிய தண்ணீரை கர்நாடகத்திடமிருந்து தமிழக முதல்வர் பெற்றுத் தர சட்டப்படி நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையடுத்து கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கூறுகையில், “கடந்த ஆண்டு விவசாய கடன் 12 ஆயிரம் கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அதையும் விஞ்சி 13 ஆயிரம் கோடிக்கு விவசாய கடன் வழங்கப்பட்டது. நடப்பாண்டு விவசாய கடன் 14 ஆயிரம் கோடிக்கு வழங்குமாறு தமிழக முதல்வர் இலக்கு நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளார். விவசாயிகள் சிட்டா, அடங்கல் போன்றவற்றை கொடுத்து கடன் பெறலாம்” என்றார்
கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழக அரசின் தலைமை கொறடா கோவி. செழியன், வேளாண் துறை ஆணையர் இல. சுப்பிரமணியன், சர்க்கரைத் துறை ஆணையர் சி. விஜயராஜ்குமார், வேளாண் துறை இயக்குனர் எஸ். பிரபாகரன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என். சுப்பையன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செ. ராமலிங்கம், எஸ். கல்யாணசுந்தரம், சட்டப்பேரவை உறுப்பினர்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, கடலூர், அரியலூர் ஆகிய 7 மாவட்ட வேளாண், கூட்டுறவு உள்ளிட்ட துறை அலுவலர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)