மயிலாடுதுறைக்கு வரும் ஆளுநருக்கு கடும் எதிர்ப்பு - பிரச்னையை சமாளிக்க 1850 போலீசார் குவிப்பு
தருமபுரம் ஆதீனத்திற்கு வருகை தரும் ஆளுநருக்கு எதிராக பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்துள்ள நிலையில் 2 டிஐஜிக்கள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் இன்று காலை 10 மணி அளவில் கும்பாபிஷேக மண்டலாபிஷேக விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு கோவிலில் தரிசனம் மேற்கொள்கிறார். தொடர்ந்து, 10 மணி அளவில் தருமபுர ஆதீன திருமடத்தில் பவள விழா ஆண்டு நினைவுகலையரங்க கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு அருங்காட்சியகத்தை திறந்து வைக்கும் ஆளுநர், தருமை ஆதீனம் 27 ஆவது குருமகாசந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமகளிடம் ஆசீ பெறுவதுடன், தருமபுர ஆதீனம் தெலுங்கானா செல்லும் ஞான ரதயாத்திரையையும் தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில் ஆளுநரின் வருகைக்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழர் உரிமை இயக்கம், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, இன்று தருமபுரம் ஆதீன மடத்துக்குச் சென்ற அக்கட்சியினர் 27 ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இல்லாததால் ஆதீன நிர்வாகத்தில் மனுவை ஒப்படைத்தனர்.
அந்த மனுவில், ஒன்றிய அரசின் தமிழ்மொழி மற்றும் தமிழ்நாட்டின் உணர்வுக்கு எதிராக செயல்படுவதற்காக தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கும், தீர்மானங்களுக்கும் ஒப்புதல் தர மறுத்து, தொடர்ந்து கிடப்பில் போட்டு வருகிறார். நீட் தேர்வு, ஏழு தமிழர் விடுதலை உள்ளிட்ட 18 மசோதாக்களும், தீர்மானங்களும் முடக்கப்பட்டுள்ளன. ஆர்எஸ்எஸ் சிந்தனையைப் போற்றுகிற ஒரு ஆளுநரை ஆதீன நிகழ்ச்சிக்கு அழைத்திருப்பது தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லது அல்ல.
எனவே ஆளுநரை திரும்பிச் செல்ல வேண்டும் என கோருகிறோம். இந்நிகழ்ச்சியில் ஆளுநரை வைத்து நடத்த வேண்டாம் என தருமபுரம் ஆதீனத்துக்கு வேண்டுகோள் விடுக்கிறோம் என அந்த மனுவில் தெரிவித்திருந்தனர். பின்னர் அவர்கள்’ செய்தியாளர்களைச் சந்தித்தபோது, எதிர்ப்பை மீறி ஆளுநரை அழைத்து ஆதீன நிகழ்ச்சி நடைபெற்றால் மாவட்டம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். மேலும், ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டி, கொடும்பாவி எரிக்கும் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்.கட்சி உட்பட பல்வேறு அமைப்பினர் ஈடுபடுவோம் என்று அறிவித்துள்ளனர்.
இதனால் ஆளுநர் வருகையை முன்னிட்டு 2 டிஐஜிக்கள் கயல்விழி, சரவணன் தலைமையில் 1850 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் ஆளுநர் வருகையின் போது மன்னம்பந்தல் அருகே கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் அந்தப் பகுதியில் காவல்துறையினர் வஜ்ரா வாகனத்தை வரவழைத்து நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.