ஆன்லைன் டிரேடிங்கில் அள்ளலாம்... ரியல் எஸ்டேட் புரோக்கரிடம் ரூ.16.36 லட்சம் மோசடி
ராஜசேகரும், அந்த மர்மநபரும் நன்கு பழகி உள்ளனர். இதையடுத்து ராஜசேகரிடம் ஆன்லைன் டிரேடிங்கில் பணம் டெபாசிட் செய்தால் அதிக லாபம் கிடைக்கும். இதற்கு தனியாக ஒரு ஆப் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கரிடம் ஆன்லைன் டிரேடிங்கில் டெபாசிட் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி ரூ.16.36 லட்சத்தை மோசடி செய்த மர்மநபர்களை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (47). பட்டதாரி. இவர் ரியல் எஸ்டேட் புரோக்கராக உள்ளார். இவரது பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்-ல் ஒருவர் அறிமுகம் ஆகியுள்ளார். தொடர்ந்து ராஜசேகரும், அந்த மர்மநபரும் நன்கு பழகி உள்ளனர். இதையடுத்து ராஜசேகரிடம் ஆன்லைன் டிரேடிங்கில் பணம் டெபாசிட் செய்தால் அதிக லாபம் கிடைக்கும். இதற்கு தனியாக ஒரு ஆப் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய ராஜசேகரும் அந்த ஆப்-ல் கூறியபடி செயல்பட்டு வந்துள்ளார். ஆன்லைன் டிரேடிங்கில் டெபாசிட் செய்ய அந்த ஆப்-ல் கூறியபடி 9 தவணைகளில் ரூ.16.36 லட்சம் பணத்தை பல்வேறு வங்கி கணக்குகளில் செலுத்தியுள்ளார். ஆரம்பத்தில் லாபம் என்று கூறி சிறிய தொகை அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு பின்னர் அவருக்கு எவ்வித லாபத் தொகையும் வரவில்லை.
இதனால் அவர் தனக்கு வழங்கப்பட்ட ஆப்-ல் பார்த்தபோது இன்னும் ரூ. 8 லட்சம் செலுத்தினால் முழுத் தொகையும் கிடைக்கும் என்று தகவல் வந்துள்ளது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜசேகர் இதுகுறித்து தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார்.
இதில் ஆனந்தராஜன் பணம் செலுத்திய வங்கி கணக்கு மகாராஷ்டிரா மாநில வங்கி கணக்கு என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த வங்கிக்கணக்கை தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசார் முடக்கி உள்ளனர். மேலும் டிஜிட்டல் அரெஸ்ட் என்பது மோசடி. மூத்த குடிமக்களை குறிவைத்து இதுபோன்ற மோசடிகள் நடந்து வருகிறது. இதுபோன்று உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் என்று வந்தால் அச்சப்பட வேண்டாம். உடனடியாக சைபர் க்ரைம் போலீசாரை தொடர்பு கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் அரெஸ்ட் என கூறி மோசடி
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த அரசு கல்லூரியில் பணியாற்றி ஓய்வுபெற்ற உடற்கல்வி இயக்குனரை டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி மிரட்டி ரூ.10 லட்சம் பணத்தை மோசடி செய்த மர்மநபர்களை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜன் (62). இவர் அரசு கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது செல்போன் எண்ணிற்கு பெங்களூர் சாந்திநகரில் இருந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேசுகிறேன் என்று ஒரு பெண் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். உங்கள் ஆதார் எண்ணை வைத்து மும்பையில் வங்கி கணக்கு தொடரப்பட்டு அதில் மோசடியாக ரூ.3 கோடி வரை பண பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.
இதற்காக நீங்கள் 10 சதவீத கமிஷ’ன் பெற்று உள்ளீர்கள். இதுகுறித்து 10க்கும் அதிகமான வழக்குகள் பதிவாகி உள்ளது. நீங்கள் நான் தரும் மும்பை சிபிஐ அதிகாரியின் செல்போன் எண்ணில் உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள். உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம் என்று கூறி மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்தராஜன் அந்த பெண் கூறிய செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டுள்ளார். எதிர்முனையில் பேசிய நபர் தன்னை சிபிஐ அதிகாரி என்று தெரிவித்து உங்கள் வங்கி கணக்கில் மோசடியாக பண பரிவர்த்தனை நடந்துள்ளது. நீங்கள் தவறு செய்யவில்லை என்றால் ரூ.10 லட்சத்தை நான் கூறும் வங்கி கணக்கில் செலுத்துங்கள். விசாரணை செய்துவிட்டு உங்கள் பணம் திருப்பி அனுப்பப்படும். உங்களை மோசடி வழக்கிற்காக டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம். இதை தவிர்க்க வேண்டும் எனில் உடன் பணம் செலுத்துங்கள் என்று தெரிவித்துள்ளார்.
அதன்படி ஆனந்தராஜன் ஒரே தவணையில் ரூ.10 லட்சத்தை செலுத்தியுள்ளார். அதன்பின்னர் மீண்டும் பணம் செலுத்த கூறியுள்ளார்கள். இதனால் சந்தேகமடைந்த ஆனந்தராஜன் இதுகுறித்து தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் சைபர் க்ரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.





















