தஞ்சை மருத்துவ கல்லூரியில் ஒரு கோடி மதிப்புள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைப்பு
’’நிமிடத்துக்கு 260 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யக்கூடிய நிலையத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி கலன், கட்டடம், மின் இணைப்பு 2041 ஆம் ஆண்டு வரையிலான பராமரிப்பு ஒப்பந்தம் என ஒரு கோடி செலவில் அமைப்பு’’
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இக்கல்லூரியில் 1980 ஆம் ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் இணைந்து ஒரு கோடி மதிப்பிலான ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தை அமைத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் 12 ஆம் தேதி வரை 115 நபர்களுக்கு புதியதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 69 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதில் ஒருவர் இறந்துள்ளார். இதுவரை 71,896 நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 899 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் மாபெரும் கொரோனா தடுப்பு ஊசி முகாம் தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்றது. இம்முகாமினை ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் நாயர், தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலீவர், சுகாதாரத்துறை இணை இயக்குனர் ரமேஷ்குமார் ஆகியோர் தஞ்சாவூர் மற்றும் சுற்றுப்புறங்களில் நடைபெறும் முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 1328 இடங்களில் 1,30,000 நபர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 1328 முகாமில், முதல் தவணை ஊசி 91,402 நபர்களுக்கும், இரண்டாம் தவணை ஊசி 25,500 நபர்கள் என செலுத்தப்பட்டது. இம்முகாமில் 110 கர்ப்பினிகளுக்கும் 235 பாலூட்டும் தாய்மார்கள் உள்பட மொத்தம் 1,16,902 நபர்களுக்கு தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது. தமிழக அளவில் 4 ஆவது இடத்தை தடுப்பு ஊசி செலுத்துவதில் தஞ்சை மாவட்டம் பெற்றுள்ளது. இந்நிலையில், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா இரண்டாவது அலையின் போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மிகுந்த நெருக்கடி ஏற்பட்டது. எனவே, மூன்றாவது அலை வருவதற்குள்ளாக போதுமான அளவுக்கு ஆக்ஸிஜன் இருப்பு வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்திக்கொள்ளும் வகையில், தினந்தோறும் பல்வேறு இடங்களில் தடுப்பு போடப்பட்டு வருகின்றது.
ஏற்கெனவே லயன்ஸ் சங்கங்கள் சார்பில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மூன்றாவது கொரோனா தொற்று அலை வந்தால், அதனை சமாளிக்கும் வகையில், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1980 ஆம் ஆண்டில் எம்பிபிஎஸ் படித்த முன்னாள் மாணவர்கள் இணைந்து இம்மருத்துவமனைக்கு பயனளிக்கும் விதமாக ஒரு கோடி மதிப்பிலான காற்றிலிருந்து செலவில்லாமல் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யக்கூடிய நிலையத்தை அமைத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தனர். இந்த நிலையத்தை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிக்குமார், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து முன்னாள் மருத்துவ மாணவர்கள் கூறுகையில், 1980 ஆண்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரியில் எம்பிபிஎஸ் படித்த மாணவர்கள், உலகம் முழுவதும் மருத்துவ வல்லுனராக சேவையாற்றி வருகின்றனர். தங்களுக்கு கல்வி கொடையளித்த மருத்துவக்கல்லுாரிக்கும், 50 ஆண்டிற்கு மேலான மருத்துவ சேவையையும்,கொரோனா இரண்டாவது அலையின் போது சிகிச்சையளித்த மருத்துவர்களின் மகத்தான சேவையையும் பாராட்டும் விதமாக, செலவில்லா ஆக்ஸீசன் உற்பத்தி செய்யும் நிலையத்தை வழங்கியுள்ளோம். இந்நிலையம் நிமிடத்துக்கு 260 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யக்கூடியது. ஆக்ஸிஜன் உற்பத்தி கலன், கட்டடம், மின் இணைப்பு 2041 ஆம் ஆண்டு வரையிலான பராமரிப்பு ஒப்பந்தம் என ஒரு கோடி செலவில் இந்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர்.