பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்புக்கு பிறகு ஒரு ஏக்கர் விவசாய நிலம் கூட கையகப்படுத்தப்படவில்லை - ஓஎன்ஜிசி உற்பத்தி பிரிவு தலைவர் மாறன்
தமிழ்நாடில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்புக்கு பிறகு ஒருஏக்கர் விவசாய நிலம் கூட கையகப்படுத்தப்படவில்லை என ஓஎன்ஜிசி உற்பத்தி பிரிவு தலைவர் மாறன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசால் அரசிதழில் 2020 பிப்ரவரி 21 அன்று வெளியிடப்பட்ட சட்டம் ‘தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம்-2020’. காவிரி டெல்டா பகுதியில், விவசாய நிலங்களைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான சட்டம் என்று இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதற்கான நோக்கம் மிகத் தெளிவாக அதன் முதல் வரியிலேயே கூறப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதியில் சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணிகள் ஓஎன்ஜிசி மூலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
மேலும், எந்த விதமான புதிய வகை ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சிகள் இல்லாதபோதிலும், மாசு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு விஷயங்களில் மேம்பட்ட தொழில்நுட்பங்களை மேலும் நடைமுறைப்படுத்தியபடி ஓஎன்ஜிசியின் பணிகள் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின்படி ஓஎன்ஜிசி சிஎஸ்ஆர் நிதி பங்களிப்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 10 ரூபாய் செலுத்தினால் தானியங்கி இயந்திரத்தில் இருந்து மீண்டும் மஞ்சள் துணிப்பை வழங்கும் வகையில் 1,40,000 ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட விழிப்புணர்வு இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் தமிழ்ஒளி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், ஒஎன்ஜிசி காவேரி அசெட் செயல் இயக்குநர் அனுராக், உற்பத்தி பிரிவு தலைவர் பி.என்.மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதனைத் செய்தியாளர்களிடம் பேசிய ஓஎன்ஜிசி உற்பத்தி பிரிவு தலைவர் மாறன் கூறுகையில், "காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பின்னர் ஒரு ஏக்கர் விவசாய நிலம் கூட கையகப்படுத்தப்படவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக துரப்பன பணி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டது. இருக்கின்ற எண்ணெய் கிணறுகளில் மட்டும் வருகின்ற எண்ணெய்யை எடுத்து வருகிறோம். அதுவும், வேகமாக குறைந்து வருகிறது.
புதிய கிணறுகள் அமைக்காத காரணத்தால் எண்ணெய் உற்பத்தி விரைவாக குறைந்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 1126 டன் இருந்த எண்ணெய் உற்பத்தி தற்போது 530 டன்னாக குறைந்துவிட்டது. இது மேலும் குறைந்து 300 டன் அளவுக்கு சென்றால் எண்ணெய் உற்பத்தி இங்கு இருக்க வேண்டுமா? என்று சிந்திக்க வேண்டிய நிலை உண்டாகும். எரிவாயு உற்பத்தி தொடர்ந்து இருப்பதால் எங்களது பணி தொடர்ந்து வருகிறது. உற்பத்தி குறைந்த கிணறுகளில் மீண்டும் பணி செய்வதற்கு முன்பு மாவட்ட நிர்வாகம், சுற்றுச்சூழல் துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த பின்னரே பணிகள் மேற்கொள்ளப்படுகிறது" என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்