Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
Kalaignar Centenary Hospital : கிண்டி கலைஞர் மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பரபரப்பை கிளப்பியுள்ளது
கிண்டி கலைஞர் மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், அதே மருத்துவமனையில் சிகிச்சையளிக்க மருத்துவர்கள் இல்லாததால் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பகீர் புகார் எழுந்துள்ளது.
மருத்துவர் மீது தாக்குதல்:
கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர் மருத்துவமனையிலேயே வைத்து சரமாரியாக குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தாய்க்கு சரியாக மருத்துவம் பார்க்காததால் தான் அவரது உடல்நிலை மோசமாகிவிட்டதாக ஆத்திரத்தில் இருந்த விக்னேஷ் மருத்துவரை தாக்கியதாக விசாரணையில் தெரியவந்தது. மருத்துவர் தங்களை மரியாதையாக நடத்தவில்லை என்று விக்னேஷின் தாய் கூறியிருந்தார்.
இளைஞர் உயிரிழப்பு:
இந்தநிலையில் சென்னை பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் வயிற்று வலி காரணமாக நேற்று கிண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் பித்தப்பை கல் பிரச்சினை இருப்பது தெரியவந்தது. இதனால் அவரச சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
ஆனால் முறையான சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பணியில் இல்லாததே காரணம் என சொல்லி விக்னேஷின் உறவினர்கள் மருத்துவமனையிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விக்னேஷின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதும் அமைதியாகினர்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக மருத்துவமனை தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. போதிய அளவு மருத்துவர்கள் பணியில் இருந்ததாகவும், விக்னேஷை உடனடியாக அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி முறையான சிகிச்சை அளித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
ஏற்கனவே தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்கள் முறையாக சிகிச்சை கொடுக்கவில்லை என புகார்கள் எழுந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இளைஞர் ஒருவர் தனது அம்மாவிற்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி மருத்துவர் ஒருவரை கத்தியால் குத்திய பரபரப்பு அடங்குவதற்குள், இளைஞர் விக்னேஷ்க்கு சிகிச்சை முறையாக வழங்காமல் மருத்துவம் பார்த்ததாக இளைஞரின் உறவினர்கள் கிண்டி மருத்துவமனையில் வாக்குவாதம் செய்த சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.