வயலில் கால்பந்து பயிற்சி.....திருவாரூரில் சாதனை படைத்து வரும் அரசு பள்ளி மாணவர்கள்...!
கிராமப்புறங்களில் பயிலும் இந்த மாணவர்களுக்கு கால்பந்தாட்ட உபகரணங்கள் கூட அதிகம் இல்லை அவ்வப்போது யாராவது ஸ்பான்சர் மூலம் ஸூ உள்ளிட்டவை வாங்கி கொடுத்தால் தான் அவர்கள் அந்த போட்டிகளில் விளையாட முடியும்
திருவாரூரில் விளையாட்டு மைதானம் இல்லாததால் வயலில் கால்பந்தாட்ட பயற்சி பெற்று சாதனை படைத்து வரும் அரசு பள்ளி மாணவர்கள்.
விளையாட்டு மைதானம் இல்லாத நிலையிலும், வயல், தரிசு நிலங்களில் ஓடி ஆடி கால்பந்தாட்ட பயிற்சி பெற்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் தேசிய அளவிலான கால்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்று தங்களை முதன்மை படுத்தி வருகின்றனர் திருவாரூர் மாவட்ட அரசு பள்ளி ஒன்றின் மாணவர்கள். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சவளக்காரன் என்ற ஊரில் அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நாலநல்லூர், ராமாபுரம், குடிதாங்கிசேரி, கோரையாறு உள்ளிட்ட கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர். விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் மட்டுமே படிக்கும் இந்த பள்ளி மாணவர்கள் தற்போது தேசிய அளவில் கால்பந்தாட்ட போட்டிகளில் சாத்தித்து வருகின்றனர். விளையாட்டில் சாதிக்க ஆர்வம் மட்டுமே இருந்தால் போதும், எந்த தடைகளையும் தாண்டி சாதிக்க முடியும் என கடந்த பல ஆண்டுகளாக நிருபித்து வருகின்றனர் இப்பள்ளி மாணவர்கள்.
550 மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளிக்கு விளையாட்டு மைதானம் கிடையாது. பள்ளியின் அருகே உள்ள தரிசு நிலங்களும், வயல்பகுதிகளும் தான் விளையாட பயிற்சி களமாக உள்ளது. சாகுபடி நேரத்தில் பயிற்சியும் செய்ய முடியாத நிலையில் இம்மாணவர்கள் உள்ளனர். மேலும், இந்த பள்ளிக்கு நிரந்தரமான உடற்பயிற்சி ஆசிரியர் கிடையாது, தொகுப்பு ஊதியத்தில் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர் ஒருவரை நியமித்துள்ளது கல்வித்துறை.இருந்தாலும், இந்த பள்ளி மாணவர்கள் கால்பந்தாட்ட போட்டியில் தனிக்கவனம் செலுத்தி மகாராஷ்டிரா, ஜார்கண்ட், டெல்லி, ஒரிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சென்று விளையாடி பரிசுகளை பெற்றுள்ளனர். மேலும் இந்த பள்ளி மாணவர்கள் தமிழக கல்பந்தாட்ட அணியிலும் இடம் பெற்று சிறப்பாக விளையாடி வருகின்றனர்.கடந்த 2014 ம் ஆண்டு பிரியதர்ஷினி என்ற மாணவி தமிழக அணியில் விளையாடி வெங்கலபதக்கம் பெற்றார். இந்த மாணவி தமிழக கால்பந்து அணிக்கு அணித்தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அதைத் தொடர்ந்து மாணவிகள் பலரும் கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடி வருகின்றனர். பள்ளியில் பெற்ற பயிற்சியை தொடர்ந்து தற்போது பல்கலைக் கழக அணிகளிலும் இந்த மாணவிகள் விளையாடி வருகின்றனர்.
முழுவதும் கிராமப்புறங்களில் பயிலும் இந்த மாணவர்களுக்கு கால்பந்தாட்ட உபகரணங்கள் கூட அதிகம் இல்லை. அவ்வப்போது யாராவது ஸ்பான்சர் மூலம் ஸூ உள்ளிட்டவை வாங்கி கொடுத்தால் தான் அவர்கள் அந்த போட்டிகளில் விளையாட முடியும். ஆனாலும் விடாமுயற்சியுடன் இந்த பள்ளி மாணவிகள் பலரும் கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடி தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டி வருகின்றனர். முழுவதும் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களை கொண்ட இந்த பள்ளிக்கு விளையாட்டு துறை மூலம் கூடுதல் வசதியை செய்து கொடுத்தால் எதிர்காலத்தில் விளையாட்டின் மூலம் நமது பெருமையை நிலைக்கச் செய்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விளையாட்டு மைதானம் இல்லாததால்வயலில் கால்பந்தாட்ட பயற்சி பெற்று சாதனை படைத்து வரும் அரசு பள்ளி மாணவர்கள் தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டி வருகின்றனர்.