(Source: ECI/ABP News/ABP Majha)
தஞ்சாவூர் மாவட்டத்தில் என்ஐஏ 4 இடங்களில் திடீர் சோதனை: 2 பேர் கைது
தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் 4 இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனை முடிவில் 2 பேரை கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் 4 இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனை முடிவில் 2 பேரை கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்புடையவர்கள்
சென்னை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் எச்.யு.டி. என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படுபவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தினர். இதில், தஞ்சாவூர் அருளானந்த நகர் அருகே குழந்தையம்மாள் நகரில் வசித்து வரும் காதர் சுல்தான் என்பவரின் மகன் புகைப்பட நிபுணர் அகமது (36) வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பு துணைக் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையில் 4 பேர் சோதனை மேற்கொண்டனர்.
மானாங்கோரையிலும் சோதனை
இதேபோல் தஞ்சாவூர் அருகே மானாங்கோரை முதன்மைச் சாலையைச் சேர்ந்த என். ஷேக் அலாவுதீன் (68) வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பின் சில அலுவலர்களும் ஏறத்தாழ 5 மணிநேரம் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது செல்போன்கள், ஹார்டு டிஸ்க்குகள், பென் டிரைவ்கள், டிவிடி, சில புத்தகங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றனர்.
இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்
மேலும், தஞ்சாவூர் அருகே சாலியமங்கலம் மருத்துவமனை சாலையைச் சேர்ந்த அப்துல் காதர் மகன் அப்துல் ரஹ்மான் (26), காந்திஜி சாலையைச் சேர்ந்த மாவு மில் நடத்தி வரும் முஜிபுர் ரஹ்மான் (45) ஆகியோர் வீடுகளிலும் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது சில பொருள்களைக் கைப்பற்றினர். தொடர்ந்து, அப்துல் ரஹ்மானையும், முஜிபுர் ரஹ்மானையும் தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர். தஞ்சை மாவட்டத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது.