NEET Exam 2022: படிப்பின் மீது தீராத காதல்... 68 வயதில் நீட் தேர்வு எழுதும் தஞ்சை முதியவர்..!
மனமது செம்மையானால் மார்க்கமெல்லாம் கை கூடும். ஆர்வம், மிக ஆர்வம், ஈடுபாடு, திட்டமிடல், தொடர் முயற்சி ஆகியவை இருந்தால் வெற்றி நிச்சயம். நான் அதனை கடைப்பிடித்து வந்ததால்தான் 28 டிகிரி முடித்துள்ளேன்.
வயதோ 68, பெற்ற டிகிரிகளோ 28. இன்னும், இன்னும் என்ற படிப்பு தாகத்தில் இப்போது நீட் தேர்வு எழுத உள்ளார் தஞ்சையை சேர்ந்த முன்னாள் அரசு ஊழியர். இவரது டிகிரிகளில் எம்.காம்., 6 எம்.ஏ., எம்.எஸ்.சி, எம்.எல் போன்றவையும் அடக்கம். அடுத்ததாக டாக்டர்தான் என்ற தீராத படிப்பு காதலில் நீட் தேர்விலும் தன் திறமையை காட்ட தயாராகி வருகிறார்.
தமிழகத்தில் நாளை மறுநாள் (17-ந் தேதி) மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடக்கிறது. டாக்டர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு படித்த மாணவ, மாணவிகள் இந்த நீட் தேர்வை எழுத காத்திருக்கின்றனர். நீட் தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தால் செலவு இன்றி படிக்கலாம். இதற்காக தேர்வு எழுதும் அனைவரும் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்து படிக்கின்றனர்.
இப்படி படிப்பவர்களில் பெரும்பாலானோர் தற்போது பிளஸ் -2 முடித்த மாணவ, மாணவிகள்தான். இந்த தேர்வை எழுத வயது வரம்பு கிடையாது என்றாலும் முதியவர்கள் நீட் நுழைவு தேர்வு எழுதுவது என்பது மிகவும் அரிதுதான். கடந்த ஆண்டு சென்னையை சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியன், தருமபுரியை சேர்ந்த 61 வயதான சிவபிரகாசம் ஆகியோர் தேர்வு எழுதி வெற்றி பெற்றிருந்தனர்.
ஆனால் அவர்களை விட தற்போது வயது அதிகமான தஞ்சையை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரும், 28 டிகிரிகளை சொந்தமாக்கிக் கொண்டவருமான ராமமூர்த்தி (68) என்பவர் நாளைமறுநாள் நடக்க உள்ள நீட் நுழைவு தேர்வை எழுத உள்ளார். இதை அனைவரும் நம்பித்தான் ஆகவேண்டும். படிக்கும் ஆர்வம் குறையாததால் இன்னும்... இன்னும்... என்று படபடவென்று பட்டங்களை வாங்கி குவித்து வருகிறார் இவர். சின்ன வயதில் டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவை தற்போது நிறைவேற்ற முழு முயற்சியுடன் நீட் தேர்வில் பங்கேற்கிறார். படிக்கும் வெறி கொண்ட இளைஞர்கள் வெற்றி பெற ரோல் மாடலாக விளங்குகிறார். தேர்வு அறிவிக்கப்பட்ட உடனே விண்ணப்பம் செய்துள்ளார். அவரது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு ஹால் டிக்கெட் வந்துவிட்டது. நாளை மறுதினம் நீட் தேர்வு எழுத தயாராகி வருகிறார்.
இதுகுறித்து ராமமூர்த்தி கூறியதாவது: எனது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் திருவிழிமிழலை கிராமம். தஞ்சையில் கூட்டுறவுத்துறை பால்வளம் தணிக்கை உதவி இயக்குனராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். வேலையின் காரணமாக குடும்பத்துடன் தஞ்சைக்கு வந்து குடியேறி விட்டோம். எனது மனைவி கமலி. அகிலா, கோகிலா என்ற இரண்டு மகள்களும், முத்துராமலிங்கம் என்ற மகனும் உள்ளனர்.
எனக்கு சிறுவயதில் இருந்தே படிப்பின் மீது அதீத ஈடுபாடு இருந்தது. தூங்கும் நேரம் தவிர மற்ற நேரத்தில் படிப்புதான் எனக்கு மூச்சு. இதுவரை 28 டிகிரி முடித்துள்ளேன். இதுவே எனது படிப்பின் மீதான தீராத காதலுக்கு சாட்சி. வழக்கறிஞர் பணி, கல்வி போதனை, பள்ளி நிர்வாகம், ஆடிட்டிங், மனநல ஆலோசனை என பல்வேறு பணிகள் மேற்கொண்டாலும் பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் படித்து வருகிறேன். எனது மகள் வழி பேத்தி கௌசிகா நீட் தேர்வு எழுதினார். கட் ஆப் மார்க் இல்லாததால் அக்ரி படித்து வருகிறார். அவர் எனது டாக்டர் படிப்பின் கனவிற்கு ஊக்கம் கொடுத்து தாத்தா நீங்கள் படியுங்கள். சாதிக்கலாம் என்று தெரிவித்தார். அவரது ஊக்கமும், குடும்பத்தினர் கொடுத்த ஆதரவும் இப்போது எனக்கு நீட் தேர்வு எழுத மிகவும் வலுவானதாக உள்ளது என்றார்.
மேலும், “ஒரு மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை அவனுக்கு எந்த வித நோயும் அண்ட கூடாது என்பதற்காக ஒரு மருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என்ற லட்சியம் எனக்குள் இருந்தது. ஆனால் அது நிறைவேறாததால் டாக்டர் ஆகி அனைவருக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. பால் தணிக்கை துறையில் வேலை கிடைத்தது. மருத்துவக் கனவு ஒரு புறம் மட்டும் இருந்து கொண்டே இருந்தது. படிப்பின் மீதான தாகத்தால் ஒவ்வொரு டிகிரியாக முடித்து கொண்டே வந்தேன். தற்போது நீட் நுழைவுத் தேர்வு எழுத வயது தடை இல்லை என்பதால் எனது மருத்துவ கனவை நிறைவேற்ற முழு முயற்சி எடுத்துள்ளேன். கடந்த ஐந்து மாதங்களாகவே தொடர்ந்து இடைவிடாது படித்து வருகிறேன். கண்டிப்பாக தேர்வில் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை உள்ளது. 720 மதிப்பெண் என்ற டார்க்கெட் நோக்கிதான் எனது ஓட்டம் இருக்கிறது. மனமது செம்மையானால் மார்க்கமெல்லாம் கை கூடும். ஆர்வம், மிக ஆர்வம், ஈடுபாடு, திட்டமிடல், தொடர் முயற்சி ஆகியவை இருந்தால் வெற்றி நிச்சயம். நான் அதனை கடைப்பிடித்து வந்ததால்தான் 28 டிகிரி முடித்துள்ளேன். வயது வெறும் எண் மட்டும் தான். படிப்புக்கு எப்போதும் வயதே கிடையாது. இளைஞர்கள் விடாமுயற்சி, தன்னம்பிக்கையுடன் படித்தால் நிச்சயம் வெற்றிதான். இவ்வாறு அவர் கூறினார்.