இயற்கையை, விவசாயத்தை பாதுகாக்க தஞ்சையில் நம்மாழ்வார் திருவிழா - எப்போது தெரியுமா?
மனித ஆரோக்கியத்தைக் காக்க கேடு விளைவிக்கும் நிறுவனங்களை எதிர்த்து போராடும் இயக்கமாக நம்மாழ்வார் மக்கள் இயக்கம் செயல்படும்.
தஞ்சாவூர்: இயற்கையை, விவசாயத்தை பாதுகாக்க வரும் 27,28 ல் தஞ்சாவூரில் நம்மாழ்வார் திருவிழா நடக்கிறது என்று நம்மாழ்வார் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சி.மகேந்திரன் தெரிவித்தார்.
இளங்காடு கிராமத்தில் பிறந்த நம்மாழ்வார்
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி இளங்காடு கிராமத்தில் பிறந்தவர் நம்மாழ்வார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை கற்றவர். கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960-ம் ஆண்டு ஆய்வு உதவியாளராகப் பணியில் சேர்ந்தார்.
இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்தவர்
களப்பணியில் ஈடுபடாமல் செய்யப்படும் பயனில்லாப் பணிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து அண்ணாமலை பல்கலைக்கழகத்திலிருந்து மூன்றாண்டுகளில் வெளியேறிய இவர், பசுமைப் புரட்சி, நிலச்சீர்திருத்தம், தொழில்மயமாக்கம் ஆகியவற்றுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர். அவற்றுக்கான ஆக்கப்பூர்வமான மாற்றுக்களையும் அவர் முன்வைத்தார். தமிழகத்தில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்து வந்த இவர், குடும்பம் அமைப்பு உட்பட 250க்கும் மேற்பட்ட அரசு சாரா அமைப்புகளின் அமைப்பாளராகவும் இருந்தார்.
தஞ்சாவூரில் நம்மாழ்வார் திருவிழா
‘தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்' என்ற அமைப்பைத் தொடங்கி, தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள் அனைத்துக்கும் சென்று கருத்தரங்கங்களும், பயிற்சி வகுப்புகளும் நடத்தி வந்தார். இத்தகைய பெருமை பெற்ற இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் திருவிழா வரும் 27, 28ம் தேதிகளில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறுகிறது.
மனித உறவுகளை சீரழிக்கும் சமூக வலைதளங்கள்
இதுகுறித்து நம்மாழ்வார் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சி. மகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 21ம் நூற்றாண்டின் மையப்பகுதி மக்கள் வாழ்வதற்கு கேள்விக்குறியாகி உள்ளது. இன்று வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்கள் மனித உறவுகளை சீரழிக்கிறது. மனிதகுலம் வாழும் பூமி பெரிய ஆபத்தை எதிர் நோக்கியுள்ளது. இதை மாற்றியமைக்க உலகில் உள்ள வல்லுனர்கள் தத்தமது கருத்துகளை கூறிவரும் நிலையில் மண்ணை காக்க தொலைநோக்கு பார்வையில் சிந்தித்தவர் நம்மாழ்வார்.
நமது நிலத்தில் ரசாயன உரம் பயன்படுத்தியது தான் பல்வேறு நோய்களுக்கு காரணமாக உள்ளது என்று கூறியது இன்றும் உண்மையாகவே இருந்து வருகிறது. பசுமைப் புரட்சி எங்கெல்லாம் உருவாக்கப்பட்டதோ அங்கெல்லாம் புற்றுநோய் உள்ளது. பல்வேறு நோய்களிலிருந்து மக்களைக் காக்க நம்மாழ்வாரின் கருத்தை சமூக சக்தியாக மாற்ற வேண்டும்.
கருத்தரங்கம், கண்காட்சி, ஆய்வரங்கம்
மனித ஆரோக்கியத்தைக் காக்க கேடு விளைவிக்கும் நிறுவனங்களை எதிர்த்து போராடும் இயக்கமாக நம்மாழ்வார் மக்கள் இயக்கம் செயல்படும். மண்,மக்களை கொள்ளையடிக்கும் நிறுவனங்களை தடுத்து, இயற்கையை பாதுகாப்பதை, இயற்கை விவசாயத்தை வளர்ப்பதை வலியுறுத்தி மாநாடு நடைபெறுகிறது. இந்த இரண்டு நாள் நம்மாழ்வார் திருவிழாவில் கருத்தரங்கம், கண்காட்சி, ஆய்வரங்கம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து இயற்கை விஞ்ஞானிகள், ஆர்வலர்கள், பசுமை பாதுகாவலர்கள் உள்ளிட்ட பல்வேறு அறிஞர் பெருமக்கள் பங்கேற்கின்றார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் யாழினிதவச்செல்வன், நாராயணன், பொறியாளர் ஜோதிபாசு,வழக்கறிஞர் கவிமணி. கீரீன்நீடா அமைப்பின் ராஜவேலு, தமிழ்நாடு தன்னார்வ அமைப்பின் ராம் பிரபு, உமாசங்கர்,முகம்மது ரபீக், விசிறிசாமியார் முருகன், தவச்செல்வன், ரத்தினகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.