நாகையில் பழுதடைந்த சாலையில் நாற்றுநட்டு கிராம மக்கள் நூதன போராட்டம்
தொடர் மழை காரணமாக சேரும் சகதியுமான பழுதடைந்த சாலையில் கிராம மக்கள் நாற்றுநட்டு நாட்டுப்புற பாடல் பாடி நூதன போராட்டம் ; அடிப்படை வசதிகள் இல்லாத 35 ஆண்டுகால பிரச்சினைக்கு தீர்வுகாண வலியுறுத்தல்.
நாகை மாவட்டம் நாகை ஒன்றியம் வடகுடி ஊராட்சி பகுதாயம் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கூலி விவசாயிகள் மட்டுமே உள்ள அப்பகுதியில் சாலை வசதி, மின்விளக்கு வசதி, குடிநீர் தொட்டி வசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளுக்காக பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சீரமைக்காமல் இருந்த சாலைகள் சேரும் சகதியுமாக படு மோசமாக மாறியதால் கடும் சிரமத்தை சந்தித்தனர். மழைக்காலங்களில் கடும் சிரமத்தை சந்திக்கும் கிராம மக்கள் இன்று சேரும் சகதியுமாக உள்ள சாலையில் நாற்று நட்டு நாட்டுப்புற பாடல் பாடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மழையில் நனைந்தபடி நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் பல ஆண்டுகளாக பழுதடைந்துள்ள 2 கிலோ மீட்டர் சாலையை சீரமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் மின் விளக்கு வசதி ஏற்படுத்தவும், பயன்படாத மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சரி செய்யவும், நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். பழுதடைந்த சாலையால் ஆபத்து காலங்களில் அவசர ஆம்புலன்ஸ் வாகனங்கள் தங்களது கிராமத்தின் உள்ளே வருவதில்லை என்று வேதனை தெரிவித்த கிராம மக்கள், தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
வேளாங்கண்ணி பேராலயத்தில் கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலி