வீட்டு முன்பக்க கதவு பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளை: தஞ்சாவூர் அருகே அதிர்ச்சி
முன்பக்க கதவு பூட்டை ஆள்நடமாட்டம் இல்லாதபோது உடைத்து உள்ளே சென்று, 40 சவரன் நகை, கொலுசு உட்பட அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கத்தை திருடி சென்றது தெரியவந்தது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் வேப்பத்தூரில் பூட்டியிருந்ம வீட்டு கதவு பூட்டை உடைத்து 40 சவரன் நகை, ரூ. 2 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் வேப்பத்துார், தெற்கு அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் ஜெகதீசன் (38). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜலெட்சுமி (34).
இந்நிலையில், ராஜலெட்சுமியின் தம்பி ஜெயக்குமார் விபத்தில் சிக்கி, தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் ராஜலெட்சுமி வீட்டை பூட்டி விட்டு, மருத்துவனையில் உள்ள தனது தம்பியை கவனித்துக் கொள்ளுவதற்காக கடந்த சில நாட்களாக தஞ்சாவூருக்கு வந்து சென்றுள்ளார்.

இதனால், ராஜலெட்சுமியை வீட்டை அவரது சகோதரி ராதா கண்காணித்து வந்தார். இந்நிலையில் நேற்று ராதா தனது அக்கா ராஜலட்சுமி வீட்டை பார்க்க சென்ற போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராதா வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் கிடந்தன.
உடனே ராதா திருவிடைமருதுார் போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த திருவிடைமருதுார் டி.எஸ்.பி., ராஜூ தலைமையிலான போலீசார் அங்கு ஆய்வுகள் மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டது.
ராஜலெஷ்மி வீடு தொடர்ந்து பூட்டியிருந்ததையும், வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் முன்பக்க கதவு பூட்டை ஆள்நடமாட்டம் இல்லாதபோது உடைத்து உள்ளே சென்று, 40 சவரன் நகை, கொலுசு உட்பட அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கத்தை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து திருவிடைமருதுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
வேப்பத்துார் பகுதியில் கடந்த ஓராண்டில், இரண்டு ஏ.டி.எம்., வீடுகளில் என தொடர்ந்து திருட்டுகள் நடந்துள்ளது. இவ்வாறு கொள்ளையடிக்கும் கும்பலை பிடிக்க போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், ஆட்கள் இல்லாத வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடித்துள்ளனர். வேப்பத்தூர் பகுதியில் கடந்த ஓராண்டில் பல திருட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளது. இவ்வாறு கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் சமூக விரோதிகளை உடன் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்ட வேண்டும் என்றனர்.





















