மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்... எம்.பி., துரைவைகோ கூறியது எதற்காக?
திருப்பூர், கோவை, கரூர் போன்ற பின்னலாடை உற்பத்தி செய்யும் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும். தொழிற்சாலைகள் மூட வேண்டிய சூழல் உருவாகும். இதனால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழப்பார்கள்.

தஞ்சாவூர்: அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த வரி விதிப்பால் பின்னலாடை நிறுவனங்கள் பாதிப்பை சந்திக்கும் என்று திருச்சி எம்.பி., துரை.வைகோ தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி எம்.பியுமான துரை.வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டதாக கூறப்படுவது தவறான தகவல். தமிழக அரசும், அதன் துறை சார்ந்த அமைச்சர்களும் இதற்கு முறையான விளக்கம் கொடுத்துவிட்டனர். விவசாயிகளை பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துவிட்டனர். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. எனவே மீண்டும் மீண்டும் ஹைட்ரோ கார்பனுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு விட்டதாக வெளியாகும் செய்தி தவறானது.
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுவதற்காக பீகாரில் பிரசாரம் நடைபெற்று வருகிறது. அதற்காகத்தான் முதல்வர் அங்கு சென்று கலந்து கொண்டார். இது பீகார் மட்டுமின்றி வரும் காலங்களில் இந்தியாவில் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் இது ஒரு பிரச்சினையாக மாறலாம். கடந்த இரு தேர்தல்களிலும் இது போன்ற முறைகேட்டில் ஆளுங்கட்சி வெற்றியை பெற்றுள்ளது. இது ஒரு ஜனநாயகத்திற்கான போராட்டமே தவிர தேர்தல் வெற்றி தோல்விக்காக நடத்தப்படும் போராட்டம் அல்ல.
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் 4 லட்சம் கோடி வர்த்தக பாதிப்பு ஏற்படும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக பின்னலாடை உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். தற்போது மத்திய அரசுடன் 220 நாடுகளுடன் வர்த்தக ரீதியாக ஒப்பந்தங்கள் உள்ளது. அதில் குறிப்பிட்ட 40 நாடுகளை தேர்வு செய்து அந்த நாடுகளுடன் வர்த்தகம் செய்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இதில் ஏதாவது பின்னடைவு ஏற்பட்டால் திருப்பூர், கோவை, கரூர் போன்ற பின்னலாடை உற்பத்தி செய்யும் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும். தொழிற்சாலைகள் மூட வேண்டிய சூழல் உருவாகும். இதனால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழப்பார்கள். எனவே தமிழக அரசு இது தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மத்திய அரசு இதில் அதீத கவனம் செலுத்தி ஏற்றுமதிக்கான மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 130வது சட்ட மசோதாவிற்கு எந்த கட்சியும் ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை. பாஜகவுடன் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. கண்டிப்பாக இந்த சட்ட மசோதா நிறைவேறாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.





















