நெருங்கும் தீபாவளி - கும்பகோணம் குளக்கரையை சுற்றி கட்டில்களை மாட்டி இடம் பிடிக்கும் வியாபாரிகள்
நகராட்சி நிர்வாகத்தில் கட்டணம் வசூலித்தாலும் அதிக விற்பனை நடைபெறும் என்பதால், திருப்பூர், கோவை, திருச்சி, நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து தற்காலிக கடை அமைக்க வியாபாரிகள் ஆர்வம்
தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் மாதம் 4 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுவதை முன்னிட்டு 23 நாட்களே உள்ள நிலையில், வெளி மாவட்ட தரைக்கடை வியாபாரிகள் கும்பகோணத்தில் உள்ள பல இடங்களில் வியாபாரத்திற்காக இடத்தை பிடித்துள்ளனர். கும்பகோணத்தை மையமாக கொண்டு அரியலுார், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, கடலுார், மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் தினந்தோறும் பொருட்களை வாங்குவதற்கு வந்து சென்றாலும், தீபாவளி வரும் நாட்களில் குடும்பத்துடன் வந்து பித்தளை பொருட்கள், துணிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்குவதற்து வந்து விடுவார்கள். அவர்கள் காலை நேரத்தில் வந்து விட்டு மாலை வரை கொள்முதல் செய்து விட்டு அதன் பிறகு குடும்பத்துடன் வீட்டிற்கு செல்வார்கள்.
இதனால் தீபாவளி காலங்களில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களை விட கும்பகோணத்தில் கூடுதலாக வர்த்தகம் நடைபெறும் இடமாகும். இந்நிலையில் ஓவ்வொரு தீபாவளி வரும் நாட்களில் வெளி மாவட்ட சில்லறை வியாபாரிகள் தோடு, ஜிமிக்கி, உள்ளாடைகள், விலை குறைந்த சேலைகள், வேட்டி, புடவைகள், சட்டைகள், வேட்டிகள், பெல்ட், பட்டாசுகள், பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவைகளை விற்பனை செய்வதற்காக கும்பகோணத்தில் உள்ள பொற்றாமரை குளம், மகாமக குளம், ஆயிகுளம் ரோடு, காந்தி பூங்கா, மடத்துத்தெரு, நாகேஸ்வரர் வடக்கு வீதி, கும்பேஸ்வரர் கோயில் தெற்கு வீதி, சோமேஸ்வரர் கோயில் தெற்கு வீதி, உச்சிபிள்ளையார் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக கடைகள் அமைப்பார்கள்.
அதற்காக அந்த பகுதிகளில் 30 நாட்களுக்கு முன்பிலிருந்தே அவர்கள் கடை போடும் இடத்திற்கு அடையாளமாக கட்டில்கள், சேலைகள், பெட்டிகள், கயிறுகளை கட்டி அடையாளங்களை பதித்து விட்டு சென்று விடுவார்கள். அதன் பின்னர் தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்பு வந்து தாங்கள் கடை வைப்பதற்கான அடையாள உள்ள இடங்களில் கடை வைத்து வியாபாரம் செய்வார்கள். இவர்கள் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக, பலத்த மழை பெய்தாலும், வெயில் அடித்தாலோ, கவலைப்படாமல், கும்பகோணம் பகுதியில் வியாபாரத்திற்காக வருகிறார்கள். இதே போல் இவர்களது உறவினர்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலுார் மாவட்டங்களில் தீபாவளி வியாபாரத்திற்கு சென்றாலும், கும்பகோணத்தில் தான் வியாபாரம் சிறப்பாக இருக்கும் என்று வியாபாரிகள் கூறுவார்கள். இதற்கென்று நகராட்சி நிர்வாகத்தில் கட்டணம் வசூலித்தாலும் அதிக விற்பனை நடைபெறும் என்பதால், திருப்பூர், கோவை, திருச்சி, பல்லடம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து தற்காலிக கடை அமைத்து கும்பகோணத்தில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆர்வமுடன் வியாபாரம் செய்ய உள்ளனர்.