Mayiladuthurai: ஓட்டுனர் இல்லாமல் திடீரென ஓடிய பேருந்து; ஓட்டம் பிடித்த மக்கள் - மயிலாடுதுறையில் பரபரப்பு
மயிலாடுதுறையில் அரசு பேருந்து ஓட்டுநர் இல்லாமல் திடீரென ஓடிய பேருந்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் அரசு பேருந்து இன்று காலை மணல்மேட்டில் இருந்து மயிலாடுதுறை பேருந்து நிலையத்திற்கு வந்தது. அப்போது பயணிகள் அனைவரும் இறங்கிய நிலையில், பேருந்து ஓட்டுநர் பேருந்தின் இன்ஜினை நிறுத்தாமல், நியூட்ரல் கியரில் வைத்து நிறுத்திவிட்டு கீழே இறங்கி சென்றுள்ளார்.
அப்போது, திடீரென்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக பேருந்து தானாக இயங்கத் துவங்கியது. இதனை பார்த்த பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். மேலும், பேருந்து நிறுத்தப்பட்டு இருந்த இடத்தில் இருந்து, சுமார் 50 மீட்டர் தொலைவிற்கு நகர்ந்து எதிரே இருந்த சுவரில் மோதி பேருந்து தானாக நின்றுள்ளது. இதில் சுவர் மற்றும் அதிலிருந்த இரும்பு கிரில்கள் சேதமடைந்தன. பேருந்தின் முன் பகுதியும் சேதமடைந்தது.
பேருந்து தானாக இயங்கத் துவங்கியதும், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தப்பியோடியதால் உயிர் சேதம் ஏதும் இன்றி பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும், பேருந்தின் உள்ளே யாரும் இல்லாத காரணத்தால் நல்வாய்ப்பாக யாருக்கும் ஏதும் பாதிப்பு ஏற்ப்படாமல் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்தை தொடர்ந்து அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேருந்தை மீட்டு அரசு பணிமனைக்கு எடுத்துச் சென்றனர். ஓட்டுனர் இல்லாமல் தானாக ஓடிய சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை அருகே நீடூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் வயிறு சம்பந்தமான பிரச்னைகளுக்கு நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் 200 -க்கும் மேற்பட்டோர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நீடூர் கிராமத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் பாஷித் தலைமையில் நடைபெற்ற முகாமை தமுமுக மாவட்ட தலைவர் ஷேக்அலாவுதீன், மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் ஆகியோர் தொடக்கி வைத்தனர். முகாமில், வயிற்றுப்புண், ஜீரண கோளாறு, குடல் இறக்கம், குடல் புற்றுநோய், மலச்சிக்கல் உள்ளிட்ட வயிறு சம்பந்தமான பிரச்னைகளுக்கு இலவச பரிசோதனை நடைபெற்றது.
இம்முகாமில், 200 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளை பெற்றனர். முகாமை தமுமுக மருத்துவரணி நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற