மயிலாடுதுறை: பணியில் அலட்சியம் - ஆதிதிராவிடர் அரசினர் கல்லூரி மாணவர் விடுதியில் 3 ஊழியர்கள் இடமாற்றம்
ஆதிதிராவிடர் அரசினர் கல்லூரி மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படாதாலும் விடுதியை பராமரிப்பு பணி செய்யாமல் இருந்த ஊழியர்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டமாக உருவாகி இரண்டாண்டுகள் ஆன நிலையில், ஆட்சியர் லலிதாவிற்கு பிறகு கடந்த மாதம் 5 -ம் தேதி இரண்டாவது ஆட்சியராக பொறுப்பேற்றார் மகாபாரதி. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற உடனேயே தனது வேலைகளை துவங்க களத்தில் இறங்கினார். நகரின் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்து, ஆய்வு மேற்கொண்டு கள நிலவரத்தை தெரிந்து கொண்டார். 'ஆயிரம் ஆனாலும், மாயவரம் போல் ஆகுமா' என்ற பெருமை கூற்று மயிலாடுதுறைக்கு இருந்தாலும், சிறு மழைக்கும் தாங்காமல் பேருந்து நிலையம், முக்கிய சாலைகள், சிறிய தெருக்கள் என்று பாகுபாடில்லாமல் சகதியாக, வடிகால் இல்லாமல் தண்ணீர் தேங்கி நிற்கும். அவ்வப்போது மழை நீருடன் சாக்கடை நீர் கலப்பது, தெருக்களில் வழிந்தோடுவது போன்ற பிரச்சனைகளை மக்கள் நிதம் சந்தித்து கொண்டுதான் இருக்கிறார்கள். கூட்ட நெரிசல், வணிக வளாகங்களின் அதிகரிப்பு போன்ற பலகாரணங்கள் இருந்தாலும், சூழலுக்கு ஏற்றாற்போல் தூய்மை பணிகளை மாற்றி மேற்கொள்ளாததும் முக்கிய காரணமாகும்.
இந்த நிலையில் புதிய ஆட்சியரின் ஆய்வில் முதலில் கண்ணில் பட்டது நகரின் சுத்தம் இன்மை. நகரின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு அசுத்தமாக இருப்பதை கண்டார். உடனே நகரத்தை தூய்மையாக வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அடுத்தடுத்த நாட்களில் வாயளவில் உத்தரவாக மட்டுமல்லாமல், தூய்மை பணிகள் நடந்துள்ளதா என்று நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த செயல் அதிகாரிகளிடம் முனைப்பையும், மக்களிடத்தில் அவர் மீதான நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் மயிலாடுதுறை நகரத்தை குப்பைகள் இல்லாமல் தூய்மையாக வைக்க வேண்டும் என்ற நோக்கில் 'தூய்மை நகரம் மயிலாடுதுறை' என்ற பெயரில் தூய்மை பணிகள் துவக்கி வைத்தார். இதனை அடுத்து 'தூய்மை நகரம் மயிலாடுதுறை' என்ற பெயரில் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குளங்கள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள், வடிகால்கால்கள் ஆகியவற்றில் தூய்மை பணிகள் துவங்கியது. தூக்கணாங்குளம், தியாகி நாராயணசாமி மேல்நிலைப்பள்ளி, பட்டமங்கலம் வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில், நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகளை அப்போது மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
அதனை தொடர்ந்து நகராட்சி உரக்கிடங்குகளில் தயாரிக்கப்பட்ட இயற்கை உரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். சித்தர் காடு பகுதியில் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த போது, போக்குவரத்துக்கு இடையூறாக தினந்தோறும் லாரிகள் நிறுத்தப்பட்டு வருவதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் உடனடியாக லாரிகளை அந்த இடத்தில இருந்து எடுக்க உத்தரவிட்டார். உடனடியாக லாரி சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சவார்த்தை நடத்தினார். 'பொது மக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் லாரிகளை நிறுத்த வேண்டாம்' என்று கேட்டுக் கொண்டார். 'லாரி நிறுத்தப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்' என்றும் எச்சரித்து லாரி உரிமையாளர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
அந்த வகையில் நேற்று மயிலாடுதுறை ஆதிதிராவிடர் அரசினர் கல்லூரி மாணவர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களுக்கு சரிவர தரமான உணவு வழங்கப்படாதாலும், விடுதியை சரிவர பராமரிப்பு பணி செய்யாமல் இருந்ததும் ஆய்வின் போது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து விடுதி காப்பாளர் மோகன் மற்றும் சமையலர்கள் சித்தார்த்தன், ஜெயபிரகாஷ், ஆகியோரை பணி இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தான் ஆய்வு செய்த இடங்களில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் செயல்படுத்தப்பட்டுள்ளதா என்று மீண்டும் அதே இடத்தில் ஆய்வு செய்து வருவது மயிலாடுதுறை மாவட்டம் மக்களிடையே மகிழ்ச்சியும், பாராட்டுகளையும் பெற்றது வருகிறது.