மயிலாடுதுறை: வார்டு உறுப்பினர்களின் குறைகளை கேட்காமல் நொறுக்கு தீனி தின்ற நகர்மன்ற தலைவர் - பொதுமக்கள் அதிருப்தி!
மயிலாடுதுறை நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் குறைகளை காதில் வாங்காமல் நொறுக்குதீனி தின்ற நகர்மன்ற தலைவரின் செயல் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இந்த நகர மன்றத்தின் மாதாந்திர உறுப்பினர் கூட்டம் நேற்று நடைபெற்றது. நகராட்சி நகர மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 36 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் வார்டில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்படும் பிறப்பு சான்றிதழை பெறுவதற்கு நகராட்சி பிறப்பு சான்றிதழ் துறை அதிகாரிகள் 400 ரூபாய் லஞ்சம் பெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 18வது வார்டு உறுப்பினர் காந்திமதி கோரிக்கை விடுத்தார்.
நகரில் எல்இடி லைட் வசதி செய்வதற்கும், குடிநீரில் பாதாளசாக்கடை நீர் கலப்பதை தடுக்க குடிநீர் குழாய் பைப்பை மாற்ற நிதி ஆதாரம் இல்லை என்று கூறும் நகராட்சிக்கு 5 குளிர்சாதனபெட்டி வாங்க மட்டும் நிதி உள்ளதா? என்றும், 5 குளிர்சாதனபெட்டிக்கு 10 லட்சம் ரூபாய் கணக்கு காட்டப்பட்டுள்ளது. எப்படி 5 குளிர்சாதனபெட்டி 10 லட்ச ரூபாயா? என்றும் கேள்வி எழுப்பினர். மக்கள் பிரச்சனைகளை நிவர்த்தி செய்து தர பணம் இல்லை என்று கூறுவதாக வார்டு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், செந்தில் கேள்வி எழுப்பினர்.
வார்டு உறுப்பினர்கள் சொல்லும் குறைகளை கேட்க, நகராட்சி அதிகாரிகள் கூட்டத்திற்கு வருவதில்லை ஏன்? என்று கேள்வி எழுப்பி பதில் சொல்லுங்கள் என்று நகரமன்ற தலைவரிடம் 22 -வது வார்டு உறுப்பினர் உஷாராஜேந்திரன் கேட்டார், அப்போது அதனை காதில் வாங்காமல் அலட்சியமாக நகர்மன்ற தலைவர் நொறுக்கு தீனி தின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இதனை அறிந்த பொதுமக்கள் கடும் நகர்மன்ற தலைவரின் இந்த செயலால் அதிருப்தி அடைந்தது, இவர்தான் மக்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து நன்மை செய்யவாரா? என்றும் கண்டனங்களை பதிவு செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்