ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு ஹோட்டல்களில் சிறப்பு தள்ளுபடி அறிவிப்பு- எங்கு தெரியுமா..?
கடந்த ஆண்டு மயிலாடுதுறையில் நடைபெற்ற சாலை விபத்துகளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். 400 க்கும் மேற்பட்ட சாலை விபத்துக்கள் நடந்துள்ளது.
மயிலாடுதுறையில் மாவட்டத்தில் உணவு உற்பத்தியாளர் சங்கம் சார்பில் பணியாளர்களுக்கு விலையில்லா ஹெல்மெட் வழங்கி ஹெல்மெட் அணிபவர்களுக்கு சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட உணவு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஊழியர்களுக்கு இலவச தலைகவசம் வழங்கும் நிகழ்ச்சி இன்று மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா பங்கேற்று விலையில்லா தலைகவசத்தை உணவகம், பேக்கரி மற்றும் ஸ்வீட் ஸ்டாலில் பணி புரியும் ஊழியர்களுக்கு வழங்கினார்.
தொடர்ந்து தலைக்கவசம் உயிர்க்கவசம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் ஹெல்மெட் அணிந்து பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி சென்றனர். இந்த பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பேருந்து நிலையம் அருகே நிறைவடைந்தது. ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
34 ஆண்டுகளுக்கு முன் முற்போக்கு பேசிய ‛இது நம்ம ஆளு‛ இதே நாளில் வெளியான கிளாசிக் மூவி!
பின்னர் இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். தவறும் பட்சத்தில் இரு சக்கர வாகனத்தின் அனைத்து ஆவணங்கள் மற்றும் ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்படும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த பேரணியில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான காவல் துறையினர் கலந்து கொண்டனர். ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்வோர் சலுகைகள் அறிவிக்க வேண்டும் என்று அப்போது காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, ஹெல்மெட் வாங்குபவர்களுக்கு மயிலாடுதுறை நகரில் 20 சதவீதம் ஹெல்மெட் விலையில் தள்ளுபடி செய்வது என்றும் ஹெல்மெட் விற்பனையாளர்களும், ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு விற்பனை விலையில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்தனர். கடந்த ஆண்டு மயிலாடுதுறையில் நடைபெற்ற சாலை விபத்துகளில் 65 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 400 க்கும் மேற்பட்ட சாலை விபத்துக்கள் நடந்துள்ளதாகவும், உயிரிழப்புகளை தடுக்க அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்