ஊராட்சி மன்ற தலைவர்களை அடித்து இழுத்துச் சென்று போலீஸ் - சீர்காழி அருகே பரபரப்பு
சீர்காழி அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்ற ஊராட்சி மன்ற தலைவர்களை அடித்து இழுத்துச் சென்று காவல்துறை வாகனத்தில் ஏற்றி கைது செய்ததால் புத்தூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. இந்நிலையில் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 16 கிராம ஊராட்சிகளுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியினை சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு வழங்காமல், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலமாக ஆன்லைன் டெண்டர்கள் விடுக்கப்பட்டு பணிகள் நடைபெறுவதாகவும், சம்பந்தப்பட்ட ஊராட்சிக்கு தெரியாமலே பணிகள் நடைபெறுவதாகவும் சில ஊராட்சி மன்ற தலைவர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டை பதிவு செய்து வந்தனர்.
இந்நிலையில், அவ்வாறு நடைபெறும் அந்த பணிகளை உடனே நிறுத்த கோரி ஊராட்சி மன்ற தலைவர்கள் நான்கு பேர் புத்தூர் கடைத் தெருவில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனை அடுத்து சம்பவம் இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட முயன்ற காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் வடிவேல், புளியந்துறை ஊராட்சி மன்ற தலைவர் நேதாஜி, உமையாள்பதி ஊராட்சி மன்ற தலைவர் கிள்ளிவளவன், முதலைமேடு ஊராட்சி மன்ற தலைவர் நெப்போலியன் உள்ளிட்ட நான்கு ஊராட்சி மன்ற தலைவர்களை கைது செய்தனர்.
தொடர்ந்து கைது செய்த ஊராட்சி மன்ற தலைவர்கள் காவல்துறை வாகனத்தில் ஏற மறுத்ததால் ஊராட்சி மன்ற தலைவர்களை காவல்துறையினர் அவர்களை அடித்து குண்டு கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றினர். அப்பொழுது அவர்களுக்கு ஆதரவாக வந்த கிராம மக்களும் அவர்களை கைது செய்ய விடாமல் சாலையில் அமர்ந்து வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து சாலை மறியல் ஈடுபட்ட கிராம மக்களையும் காவல்துறையினர் விரட்டி அடித்தனர் . இதனால் புத்தூர் கடை வீதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஆதரவாக போராடிய கிராம மக்கள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவத்தால் புத்தூர் கடைவீதியில் பதற்றம் ஏற்பட்டது அதனை தொடர்ந்து அங்கு கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.