சுவையான சத்துணவு சாப்பாடு...ருசியில் குஷியான எம்எல்ஏ ஊழியர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு
சீர்காழி அருகே சத்துணவு சாப்பிட்டு பார்த்து ஊழியர்களை சால்வை அணிவித்து எம்எல்ஏ பாராட்டு தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் அடுத்த புங்கனூர் ஊராட்சி செயல்பட்டு வருகிறது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளியின் பட்டதாரி அறிவியல் ஆசிரியர் அருணாசலம் என்பவர் தனது அமெரிக்கா வாழ் இந்தியரான தனது நண்பர் மோகன் சுதிர் பட்டாவுடன் இணைந்து எட்டு அரசு பள்ளிகளுக்கு தலா 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் இரண்டு மருத்துவமனைகளுக்கு கட்டில், மெத்தை, சக்கர நாற்காலி உள்ளிட்ட பல உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் அங்கு சென்றிருந்தார். அப்போது நிகழ்ச்சி முடித்து புறப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு வழங்குவதை கண்டார். உடனடியாக சத்துணவு பரிமாறும் இடத்திற்கு சென்று உணவினை வாங்கி சாப்பிட்டு தரம் பார்ந்த அவர், உணவு தரமாகவும், சுவையாகவும் இருப்பதை அறிந்து சத்துணவு சமையல் ஊழியர்களை அழைத்து சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
பல்வேறு அரசு பள்ளிகளில் சத்துணவு தரமானதாகவும், சுவையானதாகவும் இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவும் வேளையில், இப்பள்ளியில் உணவு தரம் சுவை குறித்து சட்டமன்ற உறுப்பினர் பாராட்டியதை தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களும் பலரும் சத்துணவு ஊழியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.