Tirupati Temple: பக்தர்களே..! திருப்பதி போறீங்களா? நாளை முதல் சிறப்பு தரிசனங்கள் ரத்து - தேவஸ்தானம் அறிவிப்பு
Tirupati Temple: நவராத்திரி பிரமோற்சவ விழாவை முன்னிட்டு நாளை முதல் திருப்பதியில் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tirupati Temple: நவராத்திரி பிரமோற்சவ விழா தொடங்கவிருப்பதை முன்னிட்டு இன்று முதல் திருப்பதிக்கு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பிரமோற்சவ விழா:
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். ஏழுமலையானுக்கு உகந்த புரட்டாசி மாதம் தொடங்கியதை அடுத்து அந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. வரும் சனிக்கிழமையுடன் புரட்டாசி மாதம் நிறைவடைய உள்ளதால், தென்னிந்தியா மட்டுமின்றி நாடு முழுவதுமிருந்து பக்தர்கள் அங்கு குவிந்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பதி கோயிலில் வரும் 15ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரையில் நவராத்திரி பிரமோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு நாளை அங்குரார்பனாமும், நாளை மறுநாள் கொடியேற்றமும் நடைபெற உள்ளது.
சிறப்பு தரிசனம் ரத்து:
பிரமோற்சவ விழாவை முன்னிட்டு நாளை முதல் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடும் கூட்ட நெரிசலும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்கும் நோக்கில் பக்தர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி. பிரேக் தரிசனம், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வருபவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு தரிசனங்கள் உள்ளிட்ட அனைத்தும் சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்களின் காத்திருப்பு நேரம் குறையும் என தேவஸ்தானம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதிகப்படியான பக்தகள் சுவாமி தரிசனம் செய்யவும் இது உதவும் என கருதப்படுகிறது. ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் இரவு 7 மணிக்கு கருட சேவை நடைபெறுவது வழக்கம். வரும் 19-ந்தேதி ஆகம விதிகளின்படி 30 நிமிடங்களுக்கு முன்பாக 6.30 மணிக்கு தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வர உள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் ஜனவரி மாதத்திற்கான ரூ.300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் மற்றும் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வருகிற 24ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்:
திருப்பதியில் நடப்பாண்டில் இரண்டாவது முறையாக நடைபெறவுள்ள பிரம்மோற்சவம் திருவிழாவினை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து, இன்று முதல் (13-10-2023) வரும் 28ம் தேதி வரை திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளுக்கு முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, www.tnstc.in - tnstc official app மூலம் பயனாளர்கள் தங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.