குற்றங்கள் குறைய நடவடிக்கை எடுக்கப்படும்; புதிய எஸ்.பி., பேட்டி
குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்பதை உறுதிப்படுத்தும், விதமாக மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை செயல்பாடு என புதிதாக காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற சுகுணாசிங் உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள திமுக தலைமையிலான அரசு ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து பல நிர்வாக மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு 27 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தது. தமிழகத்தில் 38 வது மாவட்டமாக கடைசியாக பிரிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீ நாதா நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தமிழக அரசு 27 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டதை தொடர்ந்து மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த ஸ்ரீ நாதா விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தென்காசி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பணியில் இருந்த சுகுணா சிங் பொறுப்பேற்றுள்ளார்.
சுகுணா சிங் கடந்த 2013 ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்று ஐதராபாத் தேசிய காவல் அகாடமியில் பயிற்சி பெற்று ராமநாதபுரத்தில் பணியாற்றி வந்தார். பின்னர் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார். இவர் தென்காசி சரக கூடுதல் காவல் கண்காணிப்பாளராக 2017 ஆம் ஆண்டு இருந்துள்ளார். பின்னர் நெல்லை மாநகர இணை ஆணையாளராக பொறுப்பேற்றார். பின்னர் சென்னை திருவல்லிக்கேணிக்கு மாற்றம் செய்யப்பட்டு, கடைசியாக புதிய மாவட்டமாக உருவான தென்காசி மாவட்டத்தின் முதல் காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார், தற்போது மீண்டும் புதிய மாவட்டமான மயிலாடுதுறைக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கடைசியாக பிரிக்கப்பட்ட 38 வது மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 2-வது காவல் கண்காணிப்பாளராக சுகுணாசிங் இன்று மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டு அதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டார். அதனையடுத்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதிதாக உருவாகியுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தை முழுமையான காவல் மாவட்டமாக உருவாக்க துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், பொதுமக்களுக்காகத்தான் காவல்துறை உள்ளது என்பது உறுதிப்படுத்தும் விதமாக மாவட்ட காவல்துறை செயல்பாடும் எனவும், பொதுமக்களின் நண்பன் காவல்துறை என்ற வகையில் காவல்நிலையங்களின் பொதுமக்களின் பிரச்னைகள் குறித்து உரிய முறையில் அணுகி விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் தொடர்ந்து பேசியவர் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் பாலியல் குற்றங்கள், மணல் திருட்டு, சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை போன்ற குற்றச்செயல்கள் தடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக அனைவரும் அரசின் முயற்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து காவல் துறையினரிடம் இணைந்து செயல்பட வேண்டும் என்றார். புதிய எஸ்.பி.,யின் பேட்டி, அதிகரித்து வரும் குற்றச்செயல்கள் குறையும் என்கிற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.