மயிலாடுதுறையில் இருந்து பாராளுமன்றத்தை முற்றுகையிட புறப்பட்ட விவசாயிகள்!
டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, நடைபெற உள்ள பாராளுமன்ற முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க டெல்டா விவசாயிகள் மயிலாடுதுறையில் இருந்து ரயில் மூலம் புறப்பட்டு சென்றுள்ளனர்.

விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி முதல் கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடுமையான குளிரையும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு 11 க்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், பேச்சுவார்த்தையில் எந்த தீர்வையும் ஏற்படவில்லை. 3 புதிய வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் இப்போது வரை உறுதியாக இருந்து தற்போது வரை போராட்டத்தை தொடர்ந்து உள்ளனர். இதன் காரணமாக இந்த பிரச்சினையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலை தொடங்கி நாடு முழுவதும் பரவியதால், விவசாயிகள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது, கொரோனா பரவல் குறைந்துவரும் சூழலில், நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் ஜூலை 19-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதனால், விவசாயிகளும் போராட்டத்தை மீண்டும் கையிலெடுக்க முடிவெடுத்தனர். எனவே, நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் அதே நாளில், நாடாளுமன்றத்துக்கு வெளியில் போராட்டம் நடத்த டெல்லி காவல்துறையினரிடம் அனுமதி கேட்டனர். ஆனால், கொரோனாவைக் காரணம் காட்டி, விவசாயிகளின் போராட்டத்துக்கு அனுமதி மறுத்தது டெல்லி காவல்துறை. அதனைத் தொடர்ந்து போராட்டம் நடத்துவதிலிருந்து பின்வாங்காத விவசாயிகள், 'எங்களின் போராட்டக் களத்தை டெல்லி ஜந்தர் மந்தருக்கு மாற்றிக்கொள்கிறோம்' என்று கூறியதை அடுத்து, டெல்லி காவல்துறையினர் பல்வேறு நிபந்தனைகளுடன் உடனடியாக அனுமதி வழங்கினர்.

இந்நிலையில் டெல்லியில் வருகின்ற ஐந்தாம் தேதி பாராளுமன்ற முற்றுகைப் போராட்டத்தை நடத்துவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். அதற்கு ஆதரவு தெரிவித்தும் இப்போராட்டத்தில் பங்கேற்பதற்காகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பான தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்டா மாவட்ட விவசாயிகள், தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர். அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாய சங்கத்தினர் வழியனுப்பி வைத்தனர்.

இந்த சூழலில் கடந்த ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினர். தடையை மீறி நடத்தப்பட்ட அந்த டிராக்டர் பேரணி போராட்டத்தால் டெல்லி காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தற்போது மீண்டும் நாடாளுமன்றத்தை முற்றுகையிட போவதாக கூறி ஒன்று திரளுவது டெல்லியில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.





















