TN Rain: மயிலாடுதுறை மாவட்டத்தில் 2500 ஹெக்டேர் பரப்பளவில் சம்பா நீரில் மூழ்கியுள்ளது - வேளாண்துறை தகவல்
கடந்த இரு தினங்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 2500 ஹெக்டேர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கிய உள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
![TN Rain: மயிலாடுதுறை மாவட்டத்தில் 2500 ஹெக்டேர் பரப்பளவில் சம்பா நீரில் மூழ்கியுள்ளது - வேளாண்துறை தகவல் Mayiladuthurai district 2500 hectares of samba waterlogged Agriculture Department information TNN TN Rain: மயிலாடுதுறை மாவட்டத்தில் 2500 ஹெக்டேர் பரப்பளவில் சம்பா நீரில் மூழ்கியுள்ளது - வேளாண்துறை தகவல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/15/05ce83073c23845b657ce29ea602f2b81700024887946733_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழையானது பெய்து வருகிறது. நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், "தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 15 ஆம் தேதி நிலவக்கூடும். அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை 16 -ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு - வடகிழக்கு திசையில் திரும்பி ஒரிசா கடலோர பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 17 -ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும்.
மேலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்கள் மயிலாடுதுறை மாவட்டம் மிதமானது முதல் சில சமயங்களில் கனமழை வரை பதிவாகியது. மேலும் இன்று லேசான தூரல் மழையானது ஒரு சில இடங்களில் பெய்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டும் உயர்ந்துள்ள நிலையில், தாழ்வான தண்ணீர் வடிய வழி இல்லாத பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் மழை நீரானது தேங்கியுள்ளது. மயில் மாவட்டத்தை பொறுத்த மட்டில் சுமார் 2500 ஹெக்டேர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் தண்ணீரில் முழ்கியுள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து தண்ணீர் தேங்கிய நிலங்களில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் ஈடுப்பட்டுள்ளனர். மேலும், பயிர் பாதிப்புகள் குறித்து வேளாண் துறை இணை இயக்குநர் தலைமையில் அதிகாரிகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக மாவட் ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
இதேபோன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா முழுவதும் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. சீர்காழி நகராட்சி பகுதியில் கோமளவள்ளி, முஜீபுர் ரஹ்மான் ஆகியோர் கூரை வீடு சுவர்கள் இடிந்து விழுந்துள்ளது. திருநகரி கிராமத்தில் ராமதாஸ், குவியாம்பள்ளம் கிராமத்தில் மேரி ஆகியோரின் கூரை வீடுகளும், பச்சைபெருமாநல்லூரில் நாகலட்சுமி, கீழமாத்தூரில் அம்சம் ஆகியோரின் ஓட்டு வீடுகள் என மொத்தம் ஏழு வீடுகள் மழையால் இடிந்து விழுந்துள்ளது. இதேபோல புளியந்துறை, மாங்கணாம்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமத்தில் 11 மாடுகள், கதிராமங்கலம், மாதானம் ஆகிய கிராமத்தில் 2 ஆடு மற்றும் கன்றுகுட்டி, காளை மாடுகள் என மொத்தம் 20 கால்நடைகள் தற்போது பெய்த மழைக்கு உயிரிழந்துள்ளது. மேலும் இதுகுறித்து அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் அளித்த தகவலின் படி சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவன் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)