(Source: ECI/ABP News/ABP Majha)
மயிலாடுதுறை: அம்பேத்கர் நினைவு தினத்தில் இருபிரிவினர் இடையே மோதல் - விசாரணை குழு அமைக்க கோரிக்கை
அம்பேத்கர் நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்துவது தொடர்பாக இருசமூகத்தினர் கற்களால் தாக்கிக் கொண்ட சம்பவம் தொடர்பாக குழு அமைத்து விசாரணை செய்ய கோரி விசிகவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தி கிராமத்தில் மதகடி பேருந்து நிறுத்தத்தில் நேற்று அம்பேத்கரின் 65 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அம்பேத்கரின் திருவுருவப் படத்தை வைத்து அஞ்சலி செலுத்துவதற்கான நிகழ்ச்சியை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஜாதி மோதல் ஏற்பட வழிவகுக்கும் என்று கூறியதால் பட்டவர்த்தி கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அம்பேத்கர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு சமூகத்தினருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
மோதலை தொடர்ந்து இரண்டு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். உடனடியாக கலவரம் ஏற்படாதவாறு போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் டாஸ்மாக் மதுபானக்கடையும், மற்ற கடைகளும் அடைக்கப்பட்டன. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஐந்து பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக இரு சமூகத்தினரும் மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நெப்பத்தூர் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ராஜ்குமார் தலைமையில் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில், சாமி.சீசர் பிரேம்சிங் என்பவர்கள் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு தினத்திற்கு 'வீரவணக்கம் செலுத்த மணல்மேடு காவல்நிலையத்தில் அனுமதி பெற்று வீரவணக்கம் செலுத்தியதாகவும், அந்நிகழ்ச்சியின் போது பட்டவர்த்தியை சோந்த ஒரு கும்பல் கற்களாலும், பயங்கர ஆயுதங்களாலும்' காவல்துறை முன்னிலையிலேயே தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
இந்நிலையில் இச்சம்பவத்தின் எதிரொலியாக மயிலாடுதுறை அருகே சேந்தங்குடி சீர்காழி செல்லும் சாலையில் நீலப்புலிகள் இயக்க மாவட்ட செயலாளர் கபிலன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கல்வீச்சில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யக்கோரி முழக்கமிட்டனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கலைத்தனர். இதனால் அப்பகுதியில் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Sasikala meets Rajinikanth | ரஜினிகாந்தைச் சந்தித்தார் சசிகலா..