Supreme Court Condemn: கோயிலுக்குள் செல்ல மறுத்த ராணுவ அதிகாரி; கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்றம்; நடந்தது என்ன.?
ராணுவ அதிகாரி ஒருவர், தனது படைப்பிரிவுடன் கூட்டு மத பிரார்த்தனைக்காக இந்து கோயிலுக்குள் நுழைய மறுத்ததை உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.

இந்திய ராணுவத்தில் அணிவகுப்பு லெப்டினென்ட் அதிகாரி யாக பணிபுரியும் கிறிஸ்தவர் ஒருவர், தனது படைப்பிரிவுடன், கூட்டு மத நடைமுறைகளுக்காக கோயில் மற்றும் குருத்வாராவிற்குள் நுழைய மறுத்ததற்காக, அவரை உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. அவரது நடத்தை "மிகப்பெரிய ஒழுக்கமின்மை" என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
கோயிலுக்குள் நுழைய மறுத்த ராணுவ அதிகாரி
கடந்த 2017-ம் ஆண்டு, சாமுவேல் கமலேசன் என்பவர் இந்திய ராணுவத்தின் குதிரைப் படையில் இணைந்தார். அவர் அணிவகுப்பு லெப்டினென்ட் அதிகாரியாக இருந்ததால், சீக்கியர்கள், ஜாட் மற்றும் ராஜ்புத் வீரர்கள் அடங்கிய மூன்று படைக்குழுக்களை வழிநடத்தும் பொறுப்பில் இருந்தார்.
இந்நிலையில், இந்த படைக் குழுக்கள், வாரம் தோறும் அவரவர் மதப்படி வழிபாடு நடத்துவதற்கான அணிவகுப்பு நடைபெறும். ராணுவ விதிகளின்படி, லெப்டினென்ட் அதிகாரியான சாமுவேல் கமலேசன் தான் அந்த அணிவகுப்பிற்கு தலைமை ஏற்க வேண்டும். அதன்படி, அணிவகுப்பை அவர் நடத்தினாலும், இவர் மட்டும் கோயிலுக்குள் செல்லாமலும், ஆரத்தி, பூஜை உள்ளிட்ட முக்கிய வழிபாடுகளையும் புறக்கணித்து வந்துள்ளார்.
பணிநீக்கம் செய்யப்பட்ட ராணுவ அதிகாரி
இதையடுத்து, அவர் மீது புகார் அளிக்கப்பட்டு, உயரதிகாரிகள் அவரை விசாரித்துள்ளனர். அப்போது, கோவிலுக்கு வெளியே தான் காத்திருக்க தயார் என்றும், ஆரத்தி, பூஜைகளில் பங்கேற்பதை தான் சார்ந்த கிறிஸ்தவ மதம் ஏற்காது என்பதால் பங்கேற்க விரும்பவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.
ஆனால் அதை ஏற்க மறுத்த அதிகாரிகள், ராணுவத்தில் மத ரீதியான பிளவுகளுக்கு இடமில்லை என்றும், கட்டளையை பின்பற்ற தவறிய அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கூறி, அவரை பணி நீக்கம் செய்து, ஓய்வூதிய பலன்களையும் நிறுத்தி வைத்தனர்.
பணிநீக்கத்தை உறுதி செய்த டெல்லி உயர்நீதிமன்றம்
இதைத் தொடர்ந்து, அந்த நடவடிக்கையை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சாமுவேல் கமலேசன். அதன் விசாரணையின்போதும், தனது அதிகாரிகளிடம் கூறிய விளக்கத்தையே தெரிவித்தார் சாமுவேல்.
கோவிலுக்குள் நடக்கும் சடங்குகளில் மட்டும் தான் தான் பங்கேற்கவில்லை என்றும், கோவில் வரை செல்வதாகவும் கூறிய அவரது விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம், ராணுவ அதிகாரியாக இருப்பவர் மதசார்பற்றவராக இருக்க வேண்டும் என்றும், மதத்திற்கு முக்கியத்துவம் தராமல், அணிந்திருக்கும் சீருடைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் கூறியது. மேலும், அவரது நடத்தை, இந்திய ராணுவத்தின் அனைத்து மத விதிகளுக்கும் எதிராக உள்ளதாகவும் கூறி, பணி நீக்கம் செய்தது சரி என்று தீர்ப்பளித்தது.
சாமுவேலை சாடிய உச்சநீதிமன்றம்
இதையடுத்து, இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் சாமுவேல். இதன் விசாரணை தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் ஜாய்மல்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றபோது, அவரை ராணுவத்திற்கு "முற்றிலும் பொருத்தமற்றவர்" என்று நீதிபதிகள் விமர்சித்தனர்.
விசாரணையின்போது, சாமுவேல் சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், தனது கட்சிக்காரர் கோயில் மற்றும் குருத்வாராவின் கருவறைக்குள் நுழைய மறுத்துவிட்டார். ஏனெனில் அவரது கிறிஸ்தவ நம்பிக்கை அத்தகைய மத சடங்குகளில் பங்கேற்க அனுமதிக்கவில்லை. மேலும், அவர் 6 ஆண்டுகளாக ஒரு சுத்தமான சேவைப் பதிவைக் கொண்டிருந்தார் என்றும், அவரது மனசாட்சிக்கு எதிரான செயல்களை மட்டுமே தவிர்த்தார் என்றும் அவர் கூறினார்.
ஆனால், ராணுவம் ஒரு பெரிய பொறுப்பைக் கொண்டுள்ளது என்றும், ஒழுக்கம் பேணப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர். தனது படைப்பிரிவின் மத நடவடிக்கைகளில் சேர மறுப்பதன் மூலம், அந்த அதிகாரி, தான் வழிநடத்தும் துருப்புக்களை அவமதித்ததாக அவர்கள் குறிப்பிட்டனர். ஒரு தளபதியாக, அவர் முன்மாதிரியாக வழிநடத்தியிருக்க வேண்டும் என்றும் கூறிய நீதிபதிகள், அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, ராணுவத்திலிருந்து அவர் நீக்கப்பட்டதை உறுதி செய்தனர்.




















