தமிழின் முதல் நாவலை எழுதிய மயூரம் வேதநாயகம் பிள்ளையின் 195ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்
’’செய்யுள் வடிவில் மட்டுமே தமிழ் இலக்கியங்கள் வெளி வந்து கொண்டிருந்த நிலையில் உரைநடை வடிவில் முதன்முதலாக நாவலை அறிமுகம் செய்தார் வேதநாயகம் பிள்ளை’’
கிபி 1826 ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி திருச்சி அருகே குளத்தூரில் சவரிமுத்துப் பிள்ளை, ஆரோக்கிய மேரி அம்மையார் தம்பதியினருக்கு கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை மகனாக பிறந்தார். தொடக்க கல்வியைத் தமது தந்தையிடம் கற்ற வேதநாயகம் பிள்ளை. ஆங்கிலம், தமிழ் மொழி கல்வியை திருச்சிராப்பள்ளியை சேர்ந்த தியாகராச பிள்ளையிடம் பயின்றார். சிறு வயதிலேயே திருமணங்கள், விருந்தினர் வருகை உள்ளிட்ட நிகழ்வுகளின் போது நகைச்சுவையான கவிதைகளை எழுதினார். 1851ஆம் ஆண்டு தனது 25 ஆவது வயதில் காரைக்காலைச் சேர்ந்த பாப்பம்மாள் என்பரை திருமணம் செய்தார். இவர் நீதிமன்றங்களில் பதிவாளராகவும், மொழி பெயர்ப்பாளராகவும் பணியாற்றி வந்த நிலையில் மாயவரத்தின் நகர் மன்ற தலைவராகவும் இருந்துள்ளார்.
செய்யுள் வடிவில் மட்டுமே தமிழ் இலக்கியங்கள் வெளி வந்து கொண்டிருந்த நிலையில் உரைநடை வடிவில் முதன்முதலாக நாவலை அறிமுகம் செய்தார் வேதநாயகம் பிள்ளை. 1857ஆம் ஆண்டு இவர் எழுதத் தொடங்கிய பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நாவல் ஆனது 1879ஆம் ஆண்டில் வெளியானது. மாயூரம் நகரசபையின் தலைவராக வேதநாயகம் பிள்ளை பணியாற்றிய காலத்தில் 1876 இல் ஏற்பட்ட தாது வருடப் பஞ்சத்தின் போது கஞ்சித்தொட்டி திறந்து பொதுமக்களுக்குச் சேவை செய்த அநுபவங்கள் போன்றவை இப்புதினத்தில் இடம்பெற்றுள்ளன. தமிழ் மீது பேரார்வம் கொண்டிருந்த மயூரம் வேதநாயகம் பிள்ளை 16 புத்தகங்களை எழுதி உள்ளார். வீணை மீட்டுவதில் வல்லமை பெற்றிருந்த வேதநாயகம் பிள்ளை. சமகால தமிழறிஞர்கள் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, இராமலிங்க வள்ளலார், திருவாவடுதுறை மடத்தின் மகாசன்னிதானம் சுப்பிரமணிய தேசிகர், கோபாலகிருஷ்ண பாரதியார் ஆகியோருடன் நட்பு பாராட்டி இருக்கிறார்.
தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக பல்வேறு தமிழ், இலக்கிய நூல்களை எழுதியவர். வெளிநாடுகளில் பிரபலமாகி வந்த நாவல் கதைகளை போன்று தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதினார். இதனால் தமிழ் முதல் புதினத்தை இயற்றியவர் என்ற பெயர் பெற்றார். அவரது 195 ஆவது பிறந்த தினமான இன்று மயிலாடுதுறையில் அனைத்துத் தமிழ் அமைப்புகள் சார்பில் கொண்டாடப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
தமிழுக்கு தொண்டாற்றிய வேதநாயகம் பிள்ளையின் திருவுருவ சிலை கல்லறைத் தோட்டத்தில் அமைந்துள்ளது. அன்னாரது திருவுருவ சிலைக்கு தமிழ் அறிஞர்கள், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், பொதுமக்கள் மலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வேதநாயகம் பிள்ளையின் திருவுருவ சிலையை நிறுவ வேண்டும், வேதநாயகம் பிள்ளையின் நினைவாக மணிமண்டபம் கட்ட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரது புதினத்தை தமிழ்நாடு பாடதிட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று மயிலாடுதுறை தமிழ் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
Gold-Silver Price, 11 October: நீயாவது குறைந்தாயே... வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை குறைவு!