மல்யுத்த வீராங்கணைகளுக்கு ஆதரவாக மயிலாடுதுறையில் போராட்டம் - கிள்ளிய காவலரால் பரபரப்பு
பாலியல் குற்றசாட்டுக்கு உள்ளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பிரிட்ஜ் பூசன் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் அவரை கைது செய்யக் கோரி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ்போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி முதல் போாரட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் கடந்த 28-ம் தேதி, புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்றனர். இவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் பாலியல் குற்றசாட்டுக்கு உள்ளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிட்ஜ் பூசன் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வரும் நிலையில், மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் இணைந்து மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ABP Nadu Top 10, 2 June 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
மாவட்ட தலைவர்கள் ஐயப்பன், மணிபாரதி, வெண்ணிலா தலைமையில் பேரணியாக வந்த போராட்டக்குழுவினரை பேரிகார்டுகள் வைத்து தபால் நிலையம் வாயிலில் உள்ளே செல்லாதவாறு காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது பாஜக எம்பி பிரிட்ஜ் பூசன் சரண் சிங்கை கைது செய்ய வலியுத்தி முழக்கமிட்டு, தொடர்ந்து போராட்டக்குழுவினர் தபால்நிலையம் உள்ளே செல்ல முயன்றனர்.
காவல்துறையினர் வைத்திருந்த பேரிகார்டுகளை பிடித்து இழுத்ததால் காவல்துறையினருக்கும் - போராட்டக்காரர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பேரிகாட்டை விடாமல் பிடித்து இழுத்த ஒருவரை காவல்துறையினர் அப்புறப்படுத்தும் போது தன்னை காவல்துறையினர் கிள்ளியதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் வேண்டும் என்றால் தன்னை அடித்து கொள்ளுங்கள் ஆனால் கிள்ளுவது அநாகரீகமான செயல் என தன்னை கிள்ளிய காவலரை பார்த்து கேட்க அந்த இடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.