மீண்டும் பள்ளிக்கு போகலாம்...! 36 ஆண்டுகளுக்கு பின் மனைவி மற்றும் பேரக்குழந்தைகளுடன் பள்ளிக்கு சென்ற முன்னாள் மாணவர்கள்
ஒன்றாக பயின்ற நண்பர்களை பார்த்ததும் ஆரத்தழுவி பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே மேலையூரில் பழமை வாய்ந்த சீனிவாசா மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 1980ஆம் ஆண்டு முதல் 1986 ஆம் ஆண்டு வரை பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அதே ஆண்டில் படித்த சில மாணவர்கள் ஒன்று கூடி சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். அதனை தொடர்ந்து பல்வேறு வெளிநாடு, வெளி மாநிலங்கள், மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இப்பள்ளியில் படித்த மாணவர்கள் பெரும்பாலானோர் மத்திய, மாநில அரசு பணிகளில் பணியாற்றி வருவதுடன் சிலர் சொந்த தொழிலானா விவசாயத்தையும் செய்து வரும் நிலையில் அனைவரையும் ஒன்றினைக்கும் முயற்சி மேற்கொண்டு அந்த முயற்சியில் வெற்றி பெற்றனர்.
36 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளியில் பயின்ற 80 மாணவ, மாணவிகள் தங்களது மனைவி மற்றும் கணவருடன், குழந்தைகள், சிலர் பேரப்பிள்ளைகளுடன் மேலையூர் சீனிவாசா மேல்நிலை பள்ளியில் நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முன்னாள் மாணவர்களின் வருகை பள்ளிப்பருவத்தில் ஒன்றாக பயின்ற நண்பர்களை பார்த்ததும் ஆரத்தழுவி பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அத்தோடு பள்ளி செயலர் மற்றும் கல்வி போதித்த ஆசிரியர்களையும் (ஓய்வுபெற்றவர்களை) தேடிப்பிடித்து பள்ளிக்கு அழைத்து வந்து குருவுக்கான மரியாதையும் தவறாமல் செய்து மகிழ்ந்தனர்.
மேலும் இது குறித்து பள்ளியின் செயலர் ராம.சொக்கலிங்கம் பேசுகையில், முன்னாள் மாணவர்களின் இந்த சந்திப்பு நெகிழ்ச்சியான தருணம். மாணவர் சமுதாயமும், இளைஞர் சமுதாயம், தற்போது எதிர் நோக்கக் கூடிய நிச்சயமற்ற பல சூழ்நிலைகளுக்கு மாறாக அன்றைய மாணவர்கள் ஒழுக்கமும், பண்பாடும், கலாச்சாரத்தின் மீதான பற்றுதலை இந்த ஒரு சந்திப்பு காண்பிக்கிறது என்றார்.
அதேபோன்று இப்பள்ளியில் முன்னாள் மாணவர் தேவேந்திரன் கூறுகையில், முகநூல் மற்றும் வாட்ஸ்அப் மூலமாக பேசி வந்தாலும் 36 ஆண்டுகளுக்குப் பிறகு அனைவரும் ஒன்றாக சந்தித்த நிகழ்வு மகிழ்ச்சி அளிக்கிறது, என்னுடன் படித்த சக மாணவர்கள் ஒன்றிணைந்து 15 லட்சம் மதிப்பில் ஆசிரியர்களுக்கான புதிய தங்கும் அரை கட்டிடம் கட்டவும் தீர்மானித்துள்ளனர். அது தவிர நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஒரு சதவீதம் நிதி செலுத்தி அரசிடமிருந்து 2 சதவீதம் நிதி உதவி பெற்று இப்பள்ளிக்கு இரண்டு பள்ளி கட்டிடங்களை கட்டிக் கொடுக்கவும் முடிவு செய்துள்ளோம். வரும் காலங்களிலும் இந்த முன்னாள் மாணவர்களின சந்திப்பு தொடரும் என்றார்.