TN Rain: மயிலாடுதுறையில் பொதுப்பணித்துறையின் காலம் கடந்த ஞானோதயம் - விவசாயிகள் வேதனை
தரங்கம்பாடி அருகே மகிமலை ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் சூழ்ந்து மழை நீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டு சுமார் 800 ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது.
தரங்கம்பாடி அருகே மகிமலை ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் சூழ்ந்ததால் மழை நீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டு சுமார் 800 ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டதை தொடர்ந்து ஆகாய தாமரையை அகற்றும் பணியில் பொதுப்பணி துறையினர் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர். தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மிதமான மழை பெய்து வந்தது. நேற்று மதியம் முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
நள்ளிரவு முதல் தொடர்ந்து மிதமான மழை விடிய விடிய பெய்து தற்போதும் தொடர்கிறது. மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் குறிப்பாக தரங்கம்பாடி தாலுகாவில் நேற்று தொடங்கிய மழை தற்போது வரை விடாமல் பெய்து வருகிறது. இதனால் தரங்கம்பாடி தாலுக்காவிற்கு உட்பட்ட அனந்தமங்கலம், ஒழுகைமங்கலம், ஏருக்காட்டான்சேரி, காழியப்பன்நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நேரடி விதைப்பு மற்றும் நடவு மூலம் பயிரிடப்பட்டிருந்த சுமார் 800 ஏக்கருக்கு மேலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளது.
ஒரு சில தாழ்வான விளை நிலங்களில் நெற்பயிர்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கின. விளைநிலங்களில் சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விளைநிலங்களில் இருந்து வெளியேறும் மழை நீர் அனந்தமங்கலம் அருகே உள்ள மகிமலை ஆற்றில் உள்ள கதவணைகள் திறந்து விடப்பட்டு, உப்பனாற்றில் அடைந்து உப்பனாற்றில் இருந்து தரங்கம்பாடி கடற்கரையில் கடலில் சென்று கலக்கிறது. இந்நிலையில் மகிமலை ஆற்றின் தடுப்பணையில் ஏராளமான ஆகாயத்தாமரைச் செடிகள் சூழ்ந்ததால் வெள்ள நீர் வடியாமல் தேங்கியிருந்த நிலையில், ஆகாய தாமரை செடிகளை பொக்லைன் வாகனத்தை கொண்டும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், இந்த மழை நீடித்தால் விளைநிலங்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கி பயிர்கள் அழுகும் நிலை ஏற்படும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மழைக்காலம் தொடங்கும் முன் வடிகால் வாய்க்காலை முறையாக தூர்வாராமல் தற்போது விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்த பயிர்கள் சேதமடைந்த பின்னர் பொதுப்பணித்துறையினர் இதனை தற்போது கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போல இவர்களின் பணி உள்ளதென்றும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.