மயிலாடுதுறை: ஆபத்தான நிலையில் இயங்கும் பள்ளி கட்டிடங்கள்.. சீர்செய்ய பொதுமக்கள் கோரிக்கை!
மயிலாடுதுறை மாவட்டத்தில் இடியும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களையும், பயன்பாடு அற்ற கட்டிடங்களையும் விபத்து ஏற்படும் முன்பு அகற்ற பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலில் உள்ள பள்ளி ஒன்றின் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இச்சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் கட்டிட தரம் குறித்து பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் கட்டிட தரத்தை ஆய்வு செய்ய கல்வித் துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல அரசு பள்ளிகள் சிதிலமடைந்த கட்டிடத்தில் இயங்குவதாகவும், பல கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டிய நிலையில் பயன்பாட்டு ஆபத்தான நிலையில் இருந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர். குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மணல்மேடு பேரூராட்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 656 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 1964-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளிக்கூடத்தில் 3 கட்டிடங்கள் பழுதடைந்துள்ளன. இரண்டு பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பூட்டப்பட்டு பயனற்ற நிலையில் உள்ளது. பள்ளி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்து இரண்டு கட்டிடங்களை இடிக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால் தற்போது வரை கட்டிடம் இடிக்கப்படாமல் உள்ளதாகவும் இடிக்கப்பட வேண்டிய கட்டிடத்தில் மாணவர்கள் குடிநீர் அருந்த வேண்டியுள்ளதால் மாணவர்கள் அச்சத்துடனேயே பள்ளிக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு சமையல் கூடம் இடியும் நிலையில் உள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு இரண்டு தளங்கள் உள்ள புதிய வகுப்பரை கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டு பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தரமற்ற முறையில் சிமெண்ட் பூச்சிகள் உள்ளதால் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. இதேபோல் சமையல்கூடம் பழுதடைந்துள்ளது.
இதேபோன்று சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் கீழவீதி அருகே தென்னலக்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ளது அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. இங்கு சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த சுமார் 473 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு இடித்து அகற்றப்படவேண்டிய நிலையில் உள்ள 3 கட்டிடத்திலும் வேறு வழியின்றி வகுப்புகள் நடைபெறுகிறது. பலஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட சிதிலமடைந்த கட்டிடத்தில் மாணவர்கள் அமர்ந்து கல்வி பயில்கின்றனர்.அந்த வகுப்பறைகளின் மேற்கூரை காரைகள் பெயர்ந்து அச்சம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இரும்பு ஜன்னல்கள் துருப்பிடித்து பெயர்ந்து பாதிக்குமேல் விழுந்து கிடக்கிறது. சிமெண்ட் இருக்கைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியில் நீட்டி கொண்டு அமரும் மாணவர்களின் சீருடைகளை கிழித்து வரும் நிலையில் உள்ளது. மற்றொரு பாழடைந்த வகுப்பு நடைபெறும் கட்டிடத்தை சுற்றி செடி, கொடிகள் காடுபோல் வளர்ந்துகிடக்கிறது. கட்டிடத்தின் மேலேயும் கொடிகள் வளர்ந்து நிற்கிறது. உடைந்து உள்வாங்கிய தரைதளங்கள், ஒற்றையடி பாதை வழியாக செல்லும் வகையிலான வகுப்பறைகள் என மிகவும் பரிதாப நிலையிலும், சிலநேரங்களில் பாம்பு, பூரான் போன்ற விச ஜந்துக்கள் புகுந்து மிரட்டும் வகையிலும் வகுப்பறைகள் உள்ளன. பள்ளியின் ஒரு பகுதியில் சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் மதுபிரியர்களின் கூடாரமாக மாறிவிடுகிறது. மது குடித்துவிட்டு அங்கேயே பாட்டில்களை உடைத்துவிட்டு செல்கின்றனர். இது காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள் காலில் குத்தி காயம் ஏற்படுத்துகிறது. ஆசிரியர்களின் ஓய்வறைகளும் பாழடைந்த வகுப்பறைக்கு சற்றும் சலைக்காமல் உள்ளது. பள்ளியின் இந்த பரிதாப நிலை குறித்து உயர் அதிகாரிகளுக்கு கவனத்திற்கு கொண்டு சென்றும் கவனிப்பாரற்று கிடப்பதாக கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல தனியார் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைந்து இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேர்ந்துள்ள நிலையில் தரமற்ற நிலையில் இயங்கி வரும் அரசு பள்ளிகளின் கட்டிடங்களை உடனடியாக போர்க்கால அடிப்படையில் பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பழுதடைந்து உள்ள கட்டிடங்களை இடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பெற்றோர்கள் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.