சுற்றுலாத் தலமாக்குவீங்களா? ஆசியாவிலேயே பெரிய நெற்களஞ்சியம்: முன்னோர்களின் கட்டடத் திறனுக்கு எடுத்துக்காட்டு
தமிழர்களின் திறமையை பறைசாற்றும் ஆசியாவிலேயே பெரிய நெற்களஞ்சியம் அமைந்துள்ள தஞ்சை மாவட்டம் திருப்பாலைத்துறை பாலைவனநாத சுவாமி கோயிலை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர்: தமிழர்களின் திறமையை பறைசாற்றும் ஆசியாவிலேயே பெரிய நெற்களஞ்சியம் அமைந்துள்ள தஞ்சை மாவட்டம் திருப்பாலைத்துறை பாலைவனநாத சுவாமி கோயிலை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கட்டிடக்கலையில் தொலை நோக்கு பார்வை
அழகு மிளிரும் தெருக்கள்... கண் சிமிட்டாமல் பார்க்க வைக்கும் இல்லங்கள், செங்கல் வைத்தும் சிறப்பு காட்டி கட்டிடக்கலையில் தொலைநோக்கு பார்வை கொண்டவர்களே நம் முன்னோர்கள். கைத்திறன் கொண்டு கட்டிடத்தை அழகுற மிளர வைத்து அனைவரையும் அண்ணாந்து பார்க்க வைத்த திறமைசாலி தமிழர்கள் என்றால் மிகையில்லை. அன்றல்ல... இன்றல்ல... என்றும் வலிமையான, வலுவான கட்டிடக்கலைக்கு நம் தமிழர்களே அஸ்திவாரம்.
ஆசியாவிலேயே பெரிய நெற்களஞ்சியம்
ஆயிரம் அல்ல அதற்கு மேலும், இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்தாலும் கம்பீரத்துடன் காட்சி கொடுக்கும் கட்டிடங்கள் இப்போதும் காண கிடைக்கும் அதிசயங்களே. அந்த வகையில் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயிலில் உள்ள ஆசியாவிலேயே பெரிய நெற்களஞ்சியம் உதாரணமாக உள்ளது.
பாபநாசம் அருகே திருப்பாலைத்துறையில் அமைந்துள்ளது பாலைவனநாதர் கோயில். இக்கோயிலின் உள்புறம் ராஜகோபுரத்திற்கு வடபுறத்தில் செங்கல் நெற்களஞ்சியம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த நெற்களஞ்சியம் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர் அச்சுதப்ப நாயக்கர் காலத்தில், அமைச்சர் கோவிந்த தீட்சிதரால் 1640 ம் ஆண்டு கட்டப்பட்டது. மிக சீரிய தொலைநோக்கு பார்வையுடன் கட்டப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும். முற்றிலும் செங்கல், சுண்ணாம்பு கலவை கொண்டு கட்டப்பட்ட இந்த நெற்களஞ்சியம் சுமார் 35 அடி உயரமும், 80 அடி சுற்றளவும் கொண்டது. மழை, வெயில் என்று இயற்கை சீற்றங்களை தாங்கி கம்பீரமாக இன்றும் நிலைத்து நிற்கிறது.
கடும் வெயில், கனமழையை தாங்கி நிற்கும் வெற்றிச்சின்னம்
எத்தனையோ கடும் வெயிலையும், கனமழையையும், இயற்கை இடர்பாடுகளையும் தாங்கி வெற்றிச்சின்னமாக நிற்கிறது இந்த நெற் களஞ்சியம் என்றால் மிகையில்லை. சுமார் 12 ஆயிரம் களம் தானியத்தை சேமித்து வைக்கலாம் இதனுள் என்றால் பிரமிப்பு ஏற்படுகிறது அல்லவா? சுமார் 3 ஆயிரம் டன் வரையிலான நெல்லை இந்த குதிரில் சேமிக்கலாம். அந்தளவிற்கு கொள்ளளவு உடையது. நெற்களஞ்சியத்தின் மேல்புறம் கூம்பு வடிவத்திலும், கீழே வட்ட வடிவிலும் அமைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.
தானியங்களை எடுக்க, கொட்ட தனியாக வழிகள்
நாட்டில் வறட்சி நிலவிய காலத்திலும், கொடும் பஞ்சம் தலைவிரித்தாடிய கால கட்டத்திலும் நெல்லை வாரி வழங்கி மக்களின் பஞ்சத்தை போக்கிய சிறப்பு இந்த நெற் களஞ்சியத்திற்கு உண்டு. இதனுள் வைக்கப்படும் தானியங்கள் பல ஆண்டுகளுக்கு கெட்டு போகாமல் இருக்கும் வகையில் சிறந்த தொழிற்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ளது. தானியங்களை உள்ளே கொட்ட வேண்டுமா? வெளியே எடுக்க வேண்டுமா. அதற்கென்றே மேலிருந்து கீழாக மூன்று வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நெற்களஞ்சியம் ஆசியாவிலேயே பெரிய நெற்களஞ்சியம் என்கின்றனர்.
தமிழக அரசு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நெற்களஞ்சியம் நம் முன்னோர்களின் பெருமையை பறைச்சாற்றும் உதாரணங்களில் ஒன்று என்றால் மிகையில்லை. இந்த கோயிலையும், கோயிலில் அமைந்துள்ள இந்த நெற்களஞ்சியத்தையும், வரும்கால தலைமுறைகள் நம் முன்னோர்களின் கட்டடக்கலையில் சிறந்துவிளங்கிய தன்மையை அறிந்து கொள்ளும் வகையில் சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் இதன் பெருமையை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்வார்கள்.
இந்த நெற்களஞ்சியத்தின் பெருமையும் உலகம் அறிந்து கொள்ளும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.