Local body election | தஞ்சை மாநகராட்சியில் 282 பேர்; கும்பகோணம் மாநகராட்சியில் 275 பேர் போட்டி
’’பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதி படுத்தும் வகையில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடைபெற்றது’’
கும்பகோணம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் 28 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை 445 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் வேட்புமனு பரிசீலனையின் போது பல்வேறு காரணங்களால் 57 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து வேட்புமனுக்கள் திரும்ப பெறும் நாள் என்பதால், 113 பேர் தங்களது மனுக்களை திரும்ப பெற்றுக் கொண்டனர். இதில் 48 வார்டுகளிலும் மொத்தம் 275 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களுக்குரிய அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னங்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் சின்னங்கள் ஆகியவற்றை தேர்தல் அதிகாரிகள் அறிவித்து, அறிவிப்பு பலகையில் ஒட்டினர்.
பட்டுக்கோட்டை நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் 189 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில் 1 மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், நேற்று 54 பேர் தங்களது மனுக்களை திரும்ப பெற்றனர். தற்போது 134 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதிராம்பட்டினம் நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில், 172 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர். இதில் 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், நேற்று 49 பேர் தங்களது மனுக்களை திரும்ப பெற்றனர். இதையடுத்து தற்போது 121 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 51 வார்டுகளுக்கும் 28 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை 391 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதில் 14 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று 95 பேர் தங்களது மனுக்களை திரும்ப பெற்றுக் கொண்ட நிலையில், மீதமுள்ள 282 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இறுதியாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி கும்பகோணத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி கும்பகோணம் மாநகராட்சிக்கு 48 வார்டுகளில் தேர்தல் நடைபெற உள்ளது.
இதையடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதி படுத்தும் வகையில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பை தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயில் சந்திப்பில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அங்கிருந்து தொடங்கிய கொடி அணிவகுப்பு பல்வேறு தெருக்கள் வழியாக மகாமக குளக்கரையில் அடைந்தது. இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெயச்சந்திரன், பிருந்தா, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அசோகன், வெற்றிவேந்தன், பூரணி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அழகேசன், பேபி, போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் போலீசார், ஆயுதப்படை போலீசார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், தஞ்சை மாநகராட்சி 1 வது வார்டு அதிமுக வேட்பாளர் தினேஷ், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர், வாக்காளர்களை கவருவதற்காக நுாதன முறையில், வாக்கிங் டிஜிட்டல் போர்டு வைத்து கொண்டு பிரச்சாரம் செய்தார். இந்த வாக்கிங் டிஜிட்டல் போர்டு, பெங்களூர் மாநிலத்திலிருந்து, ரூ. 10 ஆயிரம் செலவில் நான்கு போர்டு வைத்து, தஞ்சை மாநகராட்சியிலேயே முதன் முறையாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வித்தியாசமாக வாக்கு சேகரிக்க வந்ததால், வாக்காளர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.