கடைசி நாளான இன்று தஞ்சையில் களைக்கட்டும் தீபாவளி விற்பனை; மக்கள் நெரிசலில் சிக்கி தவிக்கும் காந்திஜி சாலை
காந்திஜி சாலை மார்க்கெட் பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. கூட்டம் அதிகரித்திருப்பதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூர்: தஞ்சையில் தீபாவளி ஜவுளி விற்பனை மற்றும் பட்டாசு விற்பனை கன ஜோராக நடந்து வருகிறது.
தீபாவளி பண்டிகை களை கட்டி வருவதால் தஞ்சை மாநகரின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. நகரில் பொதுமக்கள் கூட்டத்தால் போக்குவரத்து திக்கு முக்காடி வருகிறது. முக்கியமாக காந்திஜி சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கும் போலீசார் தடை விதித்துள்ளனர். காரணம் இப்பகுதியில் ஜவுளி கடைகள் அதிகம் உள்ளது. மேலும் நடந்து செல்லக்கூட முடியாத நிலையில் வாகனங்கள் போக்குவரத்து இருந்தால் இன்னும் கூடுதல் சிரமங்கள் ஏற்படும் என்பதால் காந்திஜி சாலை ஆற்றுப்பாலம் வழியாக போக்குவரத்து செல்வதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
தஞ்சை மாநகராட்சி அந்தஸ்தை பெற்றிருந்தாலும் அதிக கிராமங்கள் உள்ளடக்கிய ஒரு பெரிய கிராமமாக தான் உள்ளது. பல தெருக்கள் இன்னும் குறுகலாகவே உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு நாளை தீபாவளி என்பதால் தஞ்சையை சுற்றி உள்ள ஏராளமான கிராமங்களில் இருந்து பொதுமக்கள் ஜவுளிகள், மளிகை பொருட்கள், பட்டாசுகள் என பொருட்களை வாங்க நகருக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
அவரவர் வசதிக்கேற்ப பெரிய கடைகளுக்கும், தரைக்கடைகளுக்கும் மக்கள் படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக தஞ்சை மாநகரில் அனைத்து வீதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக தஞ்சை காந்திஜி சாலையில் அதிக அளவில் மக்கள் நெரிசல் உள்ளது. பொதுமக்கள் நடந்து சென்றுதான் ஆடைகளை வாங்க வேண்டும்.
காந்திஜி சாலை மார்க்கெட் பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. கூட்டம் அதிகரித்திருப்பதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் ஸ்வீட் ஸ்டால்களிலும் மக்கள் கூட்டம் அதிகம் உள்ளது. இந்தாண்டு பல்வேறு வகையான இனிப்புகள் புதிய வரவாக வந்துள்ளது. முக்கியமாக சிறுதானியத்தில் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை மக்கள் விரும்பி வாங்குகின்றனர். மேலும் தரைக்கடைகள் அமைக்கப்பட்டு முறுக்கு, அதிரசம், இனிப்பு சோமாசா போன்றவை விற்பனையும் அதிகரித்துள்ளது.
அதேபோல் இளைய தலைமுறையினருக்கு ஏற்ப அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் ஆடைகள் ஜவுளிக்கடைகளில் குவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு வரை தஞ்சை பகுதியில் உள்ள அனைத்து ஜவுளிக்கடைகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பிதான் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. காந்திஜி சாலையில் ஆற்றுப்பாலத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் அனைத்து வாகனங்களும் பழைய கோர்ட் ரோடு வழியாக மேம்பாலம், பெரிய கோயில், பழைய பேருந்து நிலையத்திற்கு செல்கின்றன.
குறிப்பாக தஞ்சை நகரில் இருசக்கர வாகனங்களில் வந்து செல்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம் உள்ளது. கார், வேன் போன்ற வாகனங்கள் செல்ல முடியாததால் இருசக்கர வாகனங்களில் மக்கள் வந்து செல்கின்றனர். மேலும் பஸ்கள், ஷேர் ஆட்டோக்களில் மக்கள் கூட்டம் அதிகம் உள்ளது. இன்று நள்ளிரவு வரை வாலிபர்கள் வரத்து அதிகம் இருக்கும் என்பதால் ஜவுளி கடைகளில் கூட்டம் குறையவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் மொத்த விற்பனை மளிகை கடைகளில் எண்ணெய், முறுக்கு மாவு, அதிரச மாவு விற்பனையும் களைக்கட்டியுள்ளது. இந்தாண்டு மக்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்து தீபாவளி லேகியத்தையும் வாங்கி செல்வதை காண முடிந்தது.