காலண்டரில் லட்சுமி படம் - வரும் 11ஆம் தேதி நடிகர் சூர்யா வீடு முற்றுகை என இந்து மக்கள் கட்சி அறிவிப்பு
’’படத்தில் வன்னியர் கலசத்திற்கு பதிலாக லட்சுமி படம் கொண்ட காலண்டை பயன்படுத்தியது ஹிந்து மதத்தினரை காயப்படுத்தியதாக புகார்’’
இணையதளம் மூலம் வெளியிடப்பட்ட ஜெய் பீம் என்ற திரைப்படம் கடலூர் மாவட்டத்தை மையமாக கொண்டு நடைபெற்ற உண்மை சம்பவம் என்பதை திரைப்படக்குழுவினர் தெரிவித்துள்ள சூழ்நிலையில் இந்துக்களின் மனதை காயப்படுத்தும் வகையில் இந்து விரோத போக்குடன் படத்தின் இயக்குனர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா இணைந்து ஜெய் பீம் திரைப்படத்தில், அனைத்து கதாபாத்திரத்திற்கும் உண்மையான பெயர்களை சூட்டியவர்கள் வில்லன் கதாபாத்திரத்திற்கு மட்டும் குருமூர்த்தி என்ற பெயரை சூட்டி உள்ளது கடும் கண்டனத்துக்குரியது
கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக இந்து மதத்தை போற்றி பின்பற்றுபவர்களை காயப்படுத்தும் நோக்கத்தோடு அந்தோணிசாமி என்ற கிறிஸ்துவ பெயருக்கு பதிலாக குருமூர்த்தி என்று பெயரை சூட்டி குறிப்பிட்ட ஒரு சாதியின் குறியீட்டை காட்சிப்படுத்தி தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு காட்சிப் படுத்தி உள்ளனர். பின்னர் பலத்த எதிர்ப்புக்கு பிறகு சாதியின் குறியீடாக உள்ள சில காட்சிகளை நீக்கி அங்கே இந்து மதத்தை இழிவு படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு மேற்கண்ட படக்குழுவினர் ஹிந்துக்கள் வணங்ககூடிய பிரதான தெய்வமான லட்சுமி படத்துடன் காலண்டரை பயன்படுத்தி காட்சிகளை திருத்தி ஹிந்துக்களை காயப்படுத்தி உள்ளனர்.
ஜெய்பீம் திரைப்படத்தில் கதாபாத்திரத்தின் உண்மையான பெயர் அந்தோணிசாமி என்பதை மீண்டும் குறிப்பிட்டும் அவர் சார்ந்த மதத்தின் குறியீடுகளை திரைப்படத்தில் காட்சி படுத்திடவும். இந்து மதத்தின் அடையாளம் குறியீடுகள் நீக்கிவிடவும் குருமூர்த்தி என்ற ஹிந்து பெயரை எடுத்துவிட்டு அந்தோணி சாமி என்ற கிறிஸ்துவ பெயரை வில்லன் கதாபாத்திரத்திற்கு சூட்டிட வேண்டும்.
அகரம் பவுண்டேஷன் என்ற பெயரில் மாணவர்களின் எதிர்காலத்தை திசை திருப்பும் நோக்கத்தோடு நீட் தேர்வு, மும்மொழி கல்வித் திட்டம் என்ற பல்வேறு திட்டங்களை அவதூறு பரப்பி வந்த நடிகர் சூர்யா குடும்பத்தினர் தங்கள் திரைப்படத்தை மட்டும் வணிகத்திற்காக அனைத்து மொழிகளிலும் திரையிட்டு தற்பொழுது கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக ஹிந்துக்களின் நம்பிக்கையும் காயப்படுத்தி வரும் நடிகர் சூர்யா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். மேற்கண்ட படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிட வலியுறுத்தியும், இந்து மக்கள் கட்சி சார்பில் வரும் 11ஆம் தேதி, வியாழக்கிழமை தமிழகம் முழுவதும் உள்ள இந்து உணர்வாளர்கள், பல்வேறு அமைப்பினர், இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சென்னையில் நடிகர் சூர்யாவின் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி பொது செயலாளர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 65 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு - 63 பேர் குணம், 2 பேருக்கு சிகிச்சை