தஞ்சை மாவட்டத்தில் 1.97 லட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் மகிழ்ச்சி
ஒவ்வொரு மாதம் 2 ஆம் மற்றும் 4ம் வெள்ளிக்கிழமையில் கிராமங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வேளாண் அலுவலர்கள் விவசாயிகளை நேரடியாக சந்தித்து தொழில் நுட்ப ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.

தஞ்சாவூர்: சம்பா, தாளடி பருவத்திற்கு தேவையான யூரியா, டிஏபி, காம்ப்ள்க்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது என்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் பேசியதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு 1,97,100 ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நடப்பு சம்பா, தாளடி பருவத்திற்கு தேவையான நெல் ரகங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் 410 மெட்ரிக் டன்னும் தனியார் விற்பனை நிலையங்களில் 1800 மெட்ரிக் டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
நடப்பு 2025-26 ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் "உழவரை தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம்" என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஒவ்வொரு மாதம் 2 ஆம் மற்றும் 4ம் வெள்ளிக்கிழமையில் கிராமங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வேளாண் அலுவலர்கள் விவசாயிகளை நேரடியாக சந்தித்து தொழில் நுட்ப ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு "குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் இயந்திர நடவு பணி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 4000, வீதம் பின்னேற்பு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் உயிர் உரம் நுண்நூட்ட உரங்கள் மற்றும் விதைகள் 50% மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டில் மண்வளம் காக்கும் வகையில் "மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்" என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள், ஆடாதொடா, நொச்சி நடவுச் செடிகள், வேப்பமரக்கன்றுகள், பாரம்பரிய நெல் விதைகள் மண் பரிசோதனை அட்டைகள் மற்றும் மண் புழு உரப்படுக்கைகள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் உழவர் செயலியில் முன் பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 2025-26 ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ. 57.782 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இவ்வாண்டு 114 கிராம ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு தரிசு நில தொகுப்பு அமைக்கப்பட்டுள்ளது மேலும் 50% மானியத்தில் விசை தெளிப்பான் வரப்பில் உளுந்து, உயிரி பூச்சி கொல்லி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டு மே மாதம் பெய்த கோடை மழையால் பாதிக்கப்பட்ட 455 ஏக்கர் பரப்பிற்கு ரூ.28 இலட்சம் நிவாரணத் தொகையும். செப்டம்பர் மாதம் பெய்த தென்மேற்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட 2996 ஏக்கர் பரப்பிற்கு ரூ.157 இலட்சம் நிவாரணத் தொகையும், அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்த பெங்கல் மழையால் பாதிக்கப்பட்ட 2325 ஏக்கர் பரப்பிற்கு ரூ.160 இலட்சம் நிவாராணத் தொகையும் அரசால் விடுவிக்கப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் 2024-25 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவ மழை மற்றும் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட 44,623 ஏக்கர் பரப்பிற்கு ரூ.2140 லட்சம் நிவாரணம் வேண்டி அரசிற்கு கருத்துரு சமர்பிக்கப்பட்டுள்ளது. சம்பா, தாளடி பருவத்திற்கு தேவையான யூரியா, டிஏபி, காம்ப்ள்க்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
மாவட்டத்தில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருக்காட்டுப்பள்ளி, பாபநாசம் மற்றும் பேராவூரணி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகள் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றன. இதுவரை இந்த 6 உழவர் சந்தைகளிலும் ரூ. 36.88 கோடி மதிப்பில் 8687 மெ.டன் காய்கறி வரத்து வந்துள்ளது. இதுவரை சராசரியாக 189 விவசாயிகளும் 6817 நுகர்வோரும் பயனடைந்துள்ளார்கள்.
2025-26 ஆம் ஆண்டுக்கு 595 கோடி நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டில், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் 01.04.2025 முதல் 25.08.2025 வரை ரூ.131.59 கோடி வழங்கப்பட்டுள்ளது எனவும், தஞ்சாவூர் மண்டலத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் நடப்பு சாகுபடி பருவத்திற்கு 4232.38 டன் உரங்கள் தற்பொழுது இருப்பில் உள்ளது, எனவும் தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் 2024-25 ஆம் ஆண்டின் கரும்பு அரவைப்பருவம் 24.12.2024 தேதியில் துவங்கப்பட்டு 27.03.2025 தேதி வரை 1,25,932 மெட்ரிக் டன் அரவை செய்யப்பட்டுள்ளது. நடப்பு அரவை பருவத்தில் அரவை செய்யப்பட்ட கரும்புக்கு டன் ஒன்றுக்கு மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்பட்டு நியாயம் மற்றும் ஆதாய விலை ரூ.3151 வீதம் கரும்பு கிரயமாக 27.03.2025 வரை அரவை செய்த 1,26,892 டன் கரும்புக்கு ரூபாய் 39.98 கோடி சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2024-25 நடவு பருவத்தில் இது நாள் வரை 1929.65 ஏக்கர் நடவு கரும்பும்,3543.70 ஏக்கர் மறுதாம்பு கரும்பும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்..
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், வேளாண்மை இணை இயக்குநர் வித்யா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தயாளவிநாயகன் அமுல்ராஜ், முதுநிலை மண்டல மேலாளர் செல்வம் மற்றும் அலுவலர்கள், ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.





















