Kalaignar Mahalir Thittam: மயிலாடுதுறை மாவட்டத்தில் முதற்கட்டமாக 9312 பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று முதற்கட்டமாக 9312 பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அமைச்சர் மெய்யநாதன் வழங்கியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிற்பகல் நடைபெற்ற விழாவில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இத்திட்டதை தொடங்கி வைத்தார்கள். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமா மகேஸ்வரி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்து, பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட வங்கி கணக்கு பற்று அட்டை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பேசியதாவது, தமிழக வரலாற்றில் இன்று பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய பொன்னான நாள். பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை பிரம்மாண்டமாக நாடு முழுவதும் கொண்டாடும் விதமாக, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொருளாதார விடியலுக்காக ஒரு மிகச்சிறந்த திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்கள். இதன்மூலம் 1 கோடியே 6 இலட்சம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தொடங்கி வைத்துள்ளார்கள். எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை, நான் முதல்வன் திட்டம், காலை உணவு திட்டம், மகளிர் சுய உதவிக்குழு கடன் போன்ற பல திட்டங்களை பெண்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாத திட்டத்தை நம் முதல்வர் செய்துள்ளார். இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் தூங்காமல், கல்வியும் தந்து, துணிவுமிக்க தலைவராக உள்ளார். உதவித்தொகை அல்ல, உரிமைத்தொகை தந்துள்ளார். தமிழ்நாட்டில் 39 இலட்சத்து 40 ஆயிரம் பேர் முதியோர் உதவித்தொகை, அமைப்புசாரா தொழிலாளர் உதவித்தொகை என மாதம் 1200 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நேரடியாக 1 கோடியே 45 இலட்சம் குடும்பங்கள் பயன்பெற்ற வருகின்றனர். ஆகவே, சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் அரசுக்கு நீங்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த ஜுலை 7 -ம் தேதி அன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் தொடர்பாக ஆலோசனைகளை நடத்தி, மிகவும் நேர்மையான முறையில் தகுதிவாய்ந்த குடும்பங்களுக்கு சென்றடையும் விதத்தில் பணிகள் இருக்க வேண்டுமென்று எங்களுக்கு உத்தரவிட்டார்கள்.
அதன்படி, நமது மாவட்டத்தில் கலைஞர் உரிமைத்திட்டம் விண்ணப்பங்கள் வழங்க இரு முகாம்கள் நடத்தி விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, அவ்விண்ணப்பங்களை கள ஆய்வு செய்யப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 413 நியாயவிலைக் கடைகளில் 2,84,170 குடும்ப அட்டைகள் உள்ளன. முதல் கட்டமாக 211 இடங்களிலும், 2-ம் கட்டமாக 202 இடங்களிலும் 2,27,757 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இன்றைய தினம் 9312 நபர்களுக்கு பற்று அட்டை வழங்கப்பட உள்ளது. பற்று அட்டையுடன், காகிதப் பையில் அரசின் தொகுப்பு புத்தகம் வழங்கப்பட உள்ளது.
2000 நபர்களுக்கு இன்று மேடையிலும், மீதமுள்ளவர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் மூலம் வீடு வீடாகவும், மற்ற அரசு நிகழ்ச்சிகளிலும் வழங்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. குறுஞ்செய்தி வராதவர்களுக்கு அரசுக்கு பரிந்துரை செய்யலாம். டெக்னாலஜியை பயன்படுத்தி மிக சிறப்பாக நடைமுறைப்படுத்தக் கூடிய திட்டமாக இத்திட்டம் உள்ளது. புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் என பல திட்டத்தை தமிழ்நாடு அரசானது செயல்படுத்தி வருகிறது. பெண்கள் முன்னேற்றத்திற்காக இதுபோன்ற அரசின் பல திட்டங்களை பயன்படுத்தி நீங்கள் வாழ்வில் மேம்பட உயர வேண்டும். இதன்மூலம், சமுதாயமும், நாடும் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.