மேம்பாலத்திலிருந்து தவறி விழுந்து ஜல்லிக்கட்டு காளை உயிரிழப்பு - தஞ்சை அருகே சோகம்
மக்கள் கூட்டத்தை பார்த்த மிரண்டு ஓடிய நிலையில் திடீரென பாலத்தின் மேலே இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே மாதாகோட்டையில் லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில்நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதை தஞ்சாவூர் கோட்டாட்சியர் ரஞ்சித் உறுதிமொழி வாசித்து தொடக்கி வைத்தார்.
ஆண்டுதோறும் தஞ்சை அருகே மாதாக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை தஞ்சாவூர் கோட்டாட்சியர் ரஞ்சித் உறுதி மொழி வாசித்து தொடக்கி வைத்தார். உறுதிமொழியை மாடு பிடி வீரர்களும் திருப்பி வாசித்தனர்.
தொடா்ந்து, வாடிவாசலில் இருந்து தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, அரியலூா், பெரம்பலூா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வந்த 652 காளைகள் ஒவ்வொன்றாகத் திறந்துவிடப்பட்டன. காளைகளைப் பிடிக்க மொத்தம் 375 போ் அனுமதிக்கப்பட்டனா். இவா்கள் 4 பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவாகக் களமிறக்கப்பட்டனா். மாடு பிடிக்கும் போது வீரா்கள் தடுமாறி கீழே விழுந்தால் காயம் ஏற்படாத வகையில் வாடிவாசலிலிருந்து சுமாா் 100 மீட்டா் தொலைவுக்குத் தேங்காய் நாா் போடப்பட்டு இருந்தது.
சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு சைக்கிள், பீரோ, சில்வா் பாத்திரம், குத்துவிளக்கு, மின் விசிறி, கட்டில், நாற்காலி போன்ற பல பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல் பிடிக்க முடியாத மாடுகளுக்கான பரிசுகள் மாட்டின் உரிமையாளருக்கு வழங்கப்பட்டன.
முன்னதாக, மாடு பிடி வீரா்களைச் சுகாதாரத் துறையைச் சோ்ந்த மருத்துவக் குழுவினா் உடல் நலம் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு, அதன் பிறகு தகுதியானவா்கள் மட்டுமே களத்துக்குள் செல்ல அனுமதித்தனா். இதேபோல, மாடுகளை கால்நடைப் பராமரிப்புத் துறையினா் பரிசோதனை செய்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் வல்லம் டி.எஸ்.பி., நித்யா தலைமையில் 300க்கும் அதிகமான போலீசார் மேற்கொண்டனர்.
இந்நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற காளை ஒன்று பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மேம்பாலத்திலிருந்து தவறி விழுந்து காளை பலி
பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசலில் இருந்து திறந்து விடப்பட்டது. இதில் அரியலூர் மாவட்டம் வெங்கனூர் கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவரது காளையும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றது. தொடர்ந்து அந்த காளை மைதானத்தை விட்டு வெளியே ஓடியது. காளையை உரிமையாளர் பிடிப்பதற்காக துரத்தி சென்றார். அப்போது அந்த காளை மாதகோட்டை பைபாஸ் பாலத்தின் மீது ஏறி ஓடியது. மக்கள் கூட்டத்தை பார்த்த மிரண்டு ஓடிய நிலையில் திடீரென பாலத்தின் மேலே இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. காளையின் உடலை உரிமையாளர் கண்கள் கலங்க அங்கிருந்து தனது கிராமத்திற்கு எடுத்துச் சென்றார். இதை பார்த்தவர்கள் மிகுந்த வேதனையடைந்தனர்.