கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் தொடர் வேலை நிறுத்தம்... ஜாக்டோ ஜியோ எச்சரிக்கை
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ், இளையராஜா, பன்னீர்செல்வம், சிவசங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில ஒருங்கிணைப்பாளர் மலர்விழி நிறைவுறையாற்றினார்.

தஞ்சாவூா்: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சையில் ஜாக்டோ -ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றாப்படாவிடில் தொடர் வேலை நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு ஜாக்டோ- ஜியோ சார்பில் உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ், இளையராஜா, பன்னீர்செல்வம், சிவசங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில ஒருங்கிணைப்பாளர் மலர்விழி நிறைவுறையாற்றினார்.
இந்தப் போராட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி 29-7-2011-க்கு முன்னதாக பணியேற்ற ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலில் இருந்து ஆசிரியர்களை பாதுகாத்திட தமிழ்நாடு அரசு சீராய்வு மனு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், முதுகலை ஆசிரியர்களுக்கும் , உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளது உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பலர் பேசினர் . கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் வருகிற ஜனவரி 6ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நிதிக்காப்பாளர் (ஜாக்டோ- ஜியோ) மதியழகன் நன்றி கூறினார்.
இதேபோல் திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நீலகண்டன், நாகராஜ், குமரவேல், உதுமான்அலி, பால்பாண்டி, சோ.நவநீதன் ஆகியோர் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் போராட்ட உரையை ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகநாதன் வழங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் குமரவேல், டேவிட்லிவிங்ஸ்டன், செல்வராணி, ஆரோக்கியராஜ் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து நிருபர்களிடம் மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகநாதன் கூறுகையில், புதிய ஊதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு திட்டத்தை அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பு வேண்டும் உள்ளிட்ட பத்தாம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வருகிறோம்.
தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கையில் கூறியவாறு அறிவிக்கவில்லை என்றால் ஜாக்டோ ஜியோ பேரமைப்பு வருகிற 27ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் தொடர் வேலை நிறுத்த மாநாட்டை நடத்த உள்ளனர். மேலும் ஜனவரி 6-ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை திட்டமிட்டுள்ளோம். எனவே தமிழக முதல்வர் உடனடியாக அழைத்துப் பேச வேண்டும் இல்லையென்றால் ஜனவரி 6ஆம் தேதி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்.





















