4181 சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் வட்டியில்லா கடனுதவி: மேயர் சண்.ராமநாதன் பெருமிதம்
தஞ்சாவூர் மாநகராட்சியின் சாலையோர வியாபாரிகள் பயன்படும் வகையில் அவர்களுக்கு வங்கி மூலமாக வட்டியில்லா கடன் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களின் வாழ்க்கை உயர இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூா்: தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் இதுவரை 4181 சாலையோர வியாபாரிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் வாழ்க்கை தரம் உயர தேவையான கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது என்று மேயர் சண். ராமநாதன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகள் பயன்பெறும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்துள்ளவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து சாலையோர வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் தலைமை வகித்து பேசியதாவது: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வழிகாட்டுதலோடு 'தஞ்சாவூர் மாநகராட்சியின் சாலையோர வியாபாரிகள் பயன்படும் வகையில் அவர்களுக்கு வங்கி மூலமாக வட்டியில்லா கடன் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களின் வாழ்க்கை உயர மாநகராட்சி சார்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதில் முதலில் ரூ. 10,000/- மும் அந்த கடன் முடிவுற்றபிறகு ரூ.25000/- மும் அதன்பிறகு ரூ.50000 வழங்கப்பட்டு வருகிறது. இதில் 2929 சாலையோர வியாபாரிகள் ரூ. 10,000 மும்,1035 சாலையோர வியாபாரிகள் ரூ. 25,000 மும், 217 சாலையோர வியாபாரிகள் ரூ. 50,000 மும் மொத்தம் 4,181 சாலையோர வியாபாரிகள் வட்டியில்லா கடன் பெற்று பயனடைந்துள்ளார்கள். இதன் வாயிலாக அவர்கள் வட்டிக்கு கடன் வாங்கி சிக்கலில் சிக்காத வகையில் இந்த வட்டியில்லா கடனுதவி வழங்கப்படுகிறது.
மேலும் அவர்களுக்கு சாலையோர வியாபாரிகள் என்று அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டும், அவர்களது நலன் கருதி குழுக்கள் அமைக்கப்பட்டு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மேயராக மாநகராட்சியால் செய்யப்பட்டிருந்த விதி 270 வசூல்-ன் கீழ் சாலையோர கடைகளுக்கான தொகையினை தினந்தோறும் வசூல் செய்வது ரத்து செய்யப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களிலும் சாலையோர கடைகளுக்கு எவ்விதமான தொகையும் வசூல் செய்யப்படாது. சாலையோர வியாபாரிகளுக்கான வங்கி கடனை பெறுவதற்கும், வியாபாரிகளுக்கான அடையாள அட்டை பெறுவதற்கும் மாநகராட்சியினை அணுகி விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மண்டல குழு தலைவர்கள் மேத்தா, புண்ணியமூர்த்தி, கலையரசன், ரம்யா மற்றும் சாலையோர வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகள் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் இந்த வட்டியில்லாத கடன் வழங்கும் பணியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.





















